பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

77



உள்ளன; அவள் மக்களுக்கும் நற்பணிகளுக்கும் நடு நின்று தடையாய் இருக்க மாட்டாள்”.

“நாட்டு மக்கள் அவனே தலைவனாய் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்; அவன் நல்லாட்சியில் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்; அவனும் அவர்களை மிகவும் நேசிக்கின்றான்”.

“நீ எடுத்த முடிவு இந்த நாட்டுக்கு நல்ல விடிவே யாகும்” என்று கூறினான்.

சுமந்திரன் இடையீடு

தேர் ஒட்டியாகிய சுமந்திரன் நா அடக்கம் இன்றி, நிலை கொள்ளாமல் தன் மனத்தில் பட்டதை உரைத்தான்.

“நீங்கள் ஆட்சியைத் துறப்பது தக்கதாகப்பட வில்லை; என் செய்வது? பழையன கழிகின்றன; புதியன புகுகின்றன. இது உலக இயலின் மாற்றம்; இதை யாரும் தடுக்க முடியாது.

“தோளுக்கு வந்துவிட்டவன் இராமன்; அரசு சுமை தாங்கும் ஆற்றல் அவனிடம் உள்ளது.”

“நேற்று எப்படியோ அப்படித்தான் இன்றும்; இன்று எப்படியோ அதுதான் நாளையும்; உங்களைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. உலகம் மாற்றம் விரும்புகிறது. அதனால் அவன் ஆட்சிக்கு வருவது மாட்சிமை உடையது. எனினும், உம்மை இழக்கின்றோம்; அது எமக்கு அதிர்ச்சியைத் தருகிறது” என்று இரங்கற்பா பாடினான்.