பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

79



அவ்வளவுதான்; அவன் தன ஆருயிர்த் துணைவி யிடம் சொல்லிவிட்டுப் புறப்படவில்லை; ஆடை வேறு மாற்றிக் கொண்டு வருகிறேன் என்று உரை ஆற்றவில்லை; எதற்கு? ஏன்? என்ற வினாக்களைத் தொடுக்காமல் உடனே அவனோடு புறப்பட்டான்.

கரிய மேகம் சூழ்ந்ததுபோல நீல நிறத்தவன் ஆகிய அழகன் நேரில் ஏறிச் சொன்றான்.

இராமனைத் தழுவிக் கொள்ளுதல்

வந்தவனைத் தசரதன் தன் தோள்கள் ஆரத் தழுவிக் கொண்டான். அத்தழுவலில் புதிய பொருள் இருந்தது போலக் காணப்பட்டது. அத்தோள்கள் திண்மை உடையனவா? என்ற உண்மையைக் காண எடுத்துக் கொண்ட முயற்சி போல இருந்தது.

“நிலமகள் தன்னைச் சுமக்க வலிமை மிக்க தோள்களை நாடுகிறாள்; முதியவன் நான்; ஆட்சிச் சுமையால் தளர்ந்து வாடுகிறேன்; வளர்ந்துவிட்ட நீ வந்து முட்டுக் கொடுக்க வேண்டும்”.

“நொண்டிக் குதிரை எத்தனை நாளைக்கு வண்டியை இழுக்கும்; அது சண்டித்தனம் செய்வதற்கு முன் முண்டி அடித்து நீ வந்து குடை சாயாமல் தாங்க வேண்டும்.”

“மகனைப் பெறுவதற்கு எதற்காக? மலர்கள் பூக்கும் செடிகளை வளர்ப்பது போன்றது அன்று அது. மகனை மதலை என்பர் ஏன்? தாங்கும் சக்தி அவனுக்கு உண்டு என்பதால், ‘சுமை தாங்கி’ மகன் என்று கூறுவர்.