பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

கம்பராமாயணம்



“நாளைக்கு இராமன் ஆட்சிக்கு வருகிறான்; நடக்கப் போகும் காட்சி என்ன?”

“பெட்டிச் சாவி கோசலை கையில்; அவள் கெட்டிக்காரியாகிறாள்; நீ கைகட்டிக் கொண்டு நிற்பாய்”

“வறியவர் வந்து வாய்திறந்து கேட்டால் சிறியவள் நீ என்ன செய்வாய்? மூத்தவளைக் கேட்க அவள் தந்தால் நீ உன் மானத்தைக் காத்துக் கொள்ள முடியும்; ஆட்சி அவள் கையில்; அடிமைத்தளை உன் தாளில்; வள்ளலாக வாழவேண்டிய நீ, எள்ளல் நிலையில் தாழப் போகிறாய் ஏழ்மை உனக்கு; மேன்மை அவளுக்கு”.

“எந்த வகையில் மூத்தவளுக்கு நீ தாழ்ந்துவிட்டாய்; மூவரில் நீ பேரழகி, அரசன் ஆசைக்கிழத்தி, இப்பொழுது அனைத்தையும் இழத்தி”.

“கெஞ்சுவது உன்னிடம்; அவன் அஞ்சுவது கோசலைக்கு; மஞ்சம் உனக்கு தஞ்சம் அவளுக்கு இது வஞ்சம் என்று நினைக்கிறது என் நெஞ்சம்” என்றாள்.

“மானே தேனே, என்று தெவிட்டாமல் பேசுவான்; பழகியதால் பால் புளித்ததோ! “கட்டிக் கரும்பே” என்று பேசியவனுக்கு நீ எட்டிக்காய் ஆகிவிட்டாயோ? பித்தம் பிடித்தவள்போல் நீ பிதற்றாமல் இருக்கிறாய்; சித்தம் அடங்கி, நித்தம் அவனோடு குலவப் போகிறாயா?”.

பூ உனக்கு எதற்கு? அதைப் பிய்த்துப் போடு; திலகம் ஏன்? அதனைக் கலைத்துக் கலகம் செய்; சடை; அது உனக்குத் தடை; அதை விரித்துவிடு; சிரிப்பான் அவன்முன் சீர் குலைந்துநில்; பட்டுப் புடவை ஏன்?