பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

கம்பராமாயணம்



“விரும்பியதைக்கேள், அரும்பியதைப் போன்ற உன் திருவாயால்; உள்ளம் உலோபேன்; வள்ளல் இராமன் மீது ஆணை” என்றான்.

“'தேவர்களைச் சாட்சி வைத்தாய்; வரங்கள் இரண்டு தருவதாக மாட்சிபடக் கூறினாய்; அவற்றைத் தருக” என்றாள்.

“விளம்புக வழங்குகிறேன்” என்றான்.

“என் மகன் முடிசூட வேண்டும்; இது முதல் வரம்; இராமன் காடு ஏக வேண்டும்! இஃது அடுத்த வரம்” என்று தொடுத்துக் கூறினாள்.

நஞ்சு தீண்டியது; வேகம் அடங்கியது; யானை போலச் சுருண்டு விழுந்தான் வேந்தன்.

மருண்டு விழித்தான். மயக்கம் நீங்கினான்; தயக்கம் காட்டினான்.

“உன் சுய நினைவில் பேசுகிறாயா? மற்றவர் சொல்ல நீ கேட்கிறாயா?” என்று கேட்டான்.

“முடிந்தால் கொடு; இல்லாவிட்டால் விடு” என்றாள்.

சொற்கள் அவனுக்குத் துணை வரவில்லை, பற்களைக் கடித்துக் கொண்டான்.

அவன் தன் கைகளைப் புடைத்தான்; புழுங்கி விம்மினான்; அழுங்கி நைந்தான்; நெஞ்சு அழிந்து சோர்ந்தான்.