பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. காப்பியப் பார்வை

பேராசிரியப் பெருமக்களே!

மூதறிஞர் சேதுப்பிள்ளையவர்களின் கொடையால் நிகழும் சொற்பொழிவுத் தொடருக்குப் பழைய மாணவனாகிய என்னை இவ்வாண்டு நம் பல்கலைக்கழகம் அழைத்துப் பெருமைப்படுத்தியுள்ளது. சேதுப்பிள்ளையவர்கள் சொல்லின் செல்வர் என்ற புகழ்ப்பெயர் கொண்டவர். சொல்லின் செல்வன் என்ற தொடரைச் சேதுப்பிள்ளைக்குப் பிற்காலத்தார் வழங்குமாறு ஆயிரம் ஆண்டுகட்குமுன் சொல்லி வைத்த காப்பியப் புலவர் எவரோ அவரே இம்மூன்று நாளும் என் சொற்பொழிவின் பொருளாவார். 'இல்லாத உலகத்து எங்கும் ஈங்கிவன் இசைகள் கூரக், கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி, சொல்லாலே தோன்றிற்றம்ம யார்கொல் இச்சொல்லின் செல்வன்' என்று இராமபிரான் என்றும் வாழ் அநுமனுக்குக் கொடுத்த பெயர் இன்றும் வழங்கக் காண்கின்றோம்.

இச் சொற்பொழிவைத் தொடங்கும் இத் தொடக்கத்து, இருபத்தைந்தாண்டுகட்கு முன் இப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் புகுமுகவகுப்பு நான் படிக்கத் தொடங்கிய போது, பிள்ளையவர்கள் எழுதிப் பாடமாக இருந்த வீரமாநகர் என்னும் நூலைப் படித்த நினைவும், ஒரு சடையும் திரிசடையும், தென்னிலங்கைத் தெய்வம், சிறையிருந்த செல்வி என்பன போன்ற அழகுத் தொடர்களின் நினைவும் கண்முன் ஓடுகின்றன. சொற்பொழிவுத் தொடரில் இவ்வாண்டு ஐந்தாவதாண்டு. ஐந்தாமாண்டில் இராமாயணம் பேசுவதில் ஓர் எண்ணுப் பொருத்தம் இருக்குமோ என்று கருதினாலும் கருதலாம். ஏன்? அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி, அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்காக ஏகி, அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில், அஞ்சிலே ஒன்றை வைத்தான் என எல்லாம் அஞ்சு அஞ்சாக