பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கம்பர்


இராமாயணச் சொல்லின் செல்வனுக்கு அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.

இராமாயணத் தலைப்பு

இவ்வாண்டு கம்பர் பற்றி உரையாற்றுவோம் என்று எண்ணியபோது, சேதுப்பிள்ளையின் பட்டப்பெயரோ, "வீர மாநகர் படித்த நினைவோ, அஞ்சு என்ற சிறுநயப் பொருத்தமோ எனக்குப்படவில்லை. இதற்குமுன் நடந்த சொற்பொழிவுத் தலைப்புக்களைக் கேள்விப்பட்டேன். இளங்கோ பேசப்பட்டார், வள்ளுவர் பேசப்பட்டார், கொங்கு வேளிர் பேசப்பட்டார் என்பதனை அறிந்து, இதுகாறும் பேசப்படாத புலவர் பெருமகனாகிய கம்பரைப் பற்றி இவ்வாண்டு உரை நிகழ்த்தலாமே என்று எண்ணினேன். அதற்கு அப்புறந்தான், சொல்லின் செல்வராம் சேதுப்பிள்ளையின் கொடை நிதியில் கம்பரைக் குறித்துப் பேவதற்குரிய பல பொருத்தங்கள் மேலே காட்டியவாறு எனக்குத் தோன்றின.

சொற்பொழிவுகள் பற்றி நாட்டில் சில தவறான போக்குகளும் பிறழ்ச்சியான மனப்பான்மைகளும் காணப்படுகின்றன. ஒருசிலர் ஒருசில நூல்களையே அடிக்கடி பேச்சுக்கு மேற்கொள்வதால், ஏனை நூல்களிடத்தும் அந்நூல்களைச் செய்த புலவர்களிடத்தும் அவர்கட்கு வெறுப்புண்டோ என்றுகூடக் கருதிவிடுகின்றார்கள். இக்கருத்துக்கு ஒருசிலர் இடமும் கொடுத்து விடுகின்றனர். பொதுவாக, பேச்சுப் புலவர்களின்பண்பு எப்படியிருக்க வேண்டும்? கேட்பார் மனப்பக்குவம் எப்படியிருக்க வேண்டும்? இலக்கிய வரலாற்றில் வரும் எந்நூல்களையும் பற்றியும் பேசுவதற்குப் புலவனுக்கு உரிமையும் உண்டு; கடமையும் உண்டு. ஒரு சில நூல்களில் விருப்பம் மிகுதியாக இருந்தாலும், புலவனுக்கு எந்நூல் மேலும் பகை கூடாது. ஒவ்வொரு புலவனும் எல்லா நூல்களையும் பேசிக் கொண்டு திரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறாகும். தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிந்தாமணி போன்ற பழம்பெரும் நன்னூல்கள் மக்களிடத்து மிகுதியும் பரவவில்லை என்று கருதிச் சில பெருமக்கள் அந்நூல்களையே திரும்பத் திரும்பப் பேசலாம், எழுதலாம். இது வரவேற்கத்தக்க போக்கே. சிலப்பதிகாரம் வல்லார், பெரிய புராணம் வல்லார், இராமாயணம் வல்லார் என்றாங்குச் சிலர் தனி நூற்புகழ் பெறக் காண்கிறோம். இதுவும் வரவேற்கத்தக்க போக்கே. ஆயின் எந்த ஒரு பெருநூலின் நற்படிப்புக்கும் நல்லாராய்ச்சிக்கும் ஆழ்ந்த அறிவுக்கும் வேறு பல நூல்களின் படிப்பு கட்டாயம் வேண்டும். இன்றேல் அந்த ஒரு நூற்படிப்பும் தெளிவாகாது. பன்னூல் கற்று ஒரு நூலிற் படிவானுக்கு அறிவு விரிவும் அறிவுக் கூர்மையும் அறிவோட்டமும் இருக்கும்.