பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியப் பார்வை

17



இராமாயணம் எல்லா வகையாலும் பெருநூல். 'கல்வியிற் பெரியவர் கம்பர்' என்றபடி கம்பரின் காப்பியம் கல்விப் பெருங்காப்பியமாகவே இலங்குகின்றது. சிலப்பதிகாரம் பெருநூல்தான் எனினும் அளவிற் சிறுநூல்; அச்சிற் சிறுநூல். 3000 செய்யுட்கள் கொண்ட சீவகசிந்தாமணி இராமாயணத்தின் இரு காண்டத்துக்கே அளவில் நிகராகும். மணிமேகலை இராமாயணத்தின் சிறு படலங்கள் அளவே உடையது. பெரியபுராணம் அதன் இரண்டு காண்டம் அளவினதே. தமிழி உள்ள பல பெருங்காப்பியங்களைக் காட்டிலும் இராமாயணத்தின் கனம் கூடுகின்றது. கூடிய கனத்துக் கேற்பக் கூடுதலான காப்பியக் குணங்களும் உள்ளன. சொருணம்மாள் சொற்பொழிவில், முன்னர்ப் பேசப்படாத நூல் என்று இராமாயணத்தை மேற்கொண்டேன். கொண்டபின், எவ்வளவு பெருநூல், நூல் நலங்கள் எவ்வளவு புதைந்து கிடக்கும் நுண்ணூல், எவ்வளவு தலைப்புக்களுக்கு உரிய விரிவுநூல். இந்நூலை மூன்று தலைப்பில் மூன்று மணியளவில் எங்ஙனம் முடியப் பேசுவது என்ற அச்சம் உண்டாயிற்று. இராமாயணம் அஞ்சாப் பாத்திரங்கள் பேசும் அதிராக் காப்பியமாதலின், அதனைப் பேச அஞ்ச வேண்டியதில்லை யல்லவா?

தலைப்பின்மேற் சொற்பொழிவதற்குமுன், என்னை இவ்வாண்டுப் பொழிவுக்கு அழைத்த நம் பல்கலைக் கழகத்தார்க்கும் நிறுவிக் காத்துவரும் அரசத் தோன்றலுக்கும் நன்றியுடையேன். கேட்கக் குழுமியிருக்கும் பேராசிரியப் பெருமக்கட்கும் மாணவ இளையர்க்கும் நன்றியேன். நன்றி கூறக்கேட்டதும் பேச்சு முடியப் போகிறதோ என்று சிலர் நினைக்கலாம். சில கூட்டத்து நன்றிகூறத் தொடங்கும் போது பலர் இருப்பதில்லை. நன்றி கூறுவதைக் கேளாத குற்றத்துக்கு அவர்கள் ஆளாக வேண்டாமேயென்று நன்றிக்கடன் மொழிந்து சொற் பொழியத் தொடங்குகின்றேன்.

திறனாய்வு

'காப்பியப் பார்வை' என்ற தலைப்பில் இன்றும், காப்பியக் களங்கள் என்ற தலைப்பில் நாளையும், 'காப்பிய நேர்மை' என்ற தலைப்பில் நாளை நின்றும் பேசுவதென என் பொழிவுகளை வகுத்துக் கொண்டுள்ளேன். காப்பியப் பார்வை என்னும் தலைப்பு பொதுவாக இருந்தாலும் கம்பர் பெருமானின் இராமாயணக் காப்பியமே இங்கு ஆராய்வதற்கு உரியது.

க. 2.