பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியப் பார்வை

19


மனம் நிறையவும் கேட்பார் மனம் குளிரவும் தன் மனம் ஒப்பவும் பாராட்டி விடுதல் என்பது உலகில் அரிய காரியம். ஒற்றுமை வேற்றுமை நெறி தொடக்கத்து இலக்கியப் பூசலாய், எழுத்துப் பூசலாய்ச் சில சமயங்களில் மன்பதைப் பூசலாய் வளர்ந்துவிடப் பார்க்கின்றோம்.

ஒரு மொழியில், ஒரு காலத்தில், ஒரு இனவாயத்தில் தோன்றிய இலக்கியங்களுக்குள்ளேயே ஒப்புமை காண்டல் சரிப்படவில்லை. ஒப்புமை காட்டினால், அவரைப் பார்த்து எழுதினார் இவர் என்ற இகழ்வுணர்ச்சி பரவுகின்றது. வேற்றுமை காட்டினால் ஏற்றுத் தாழ்வு பிறக்கின்றது. இந்நிலையில் மொழிமாறு, இடமாறு, நாகரிக மாறான கிரேக்கம், இலத்தீன், பிரான்சு, ஆங்கிலம் முதலிய இலக்கியங்களோடு நம் இலக்கியங்களை உராய்வதும் வெளியிலக்கியங்களை இலக்கியக் காட்டியாக மேற்கொள்வதும் மிகவும் கடைபோகாது என்பது வெளிப்படை. சிலப்பதிகாரத்துக்கும் இராமாயணத்துக்கும், இராமாயணத்துக்கும் பெரியபுராணத்துக்கும், பெரியபுராணத்துக்கும் சிந்தாமணிக்கும் இவ்வாறே ஒரு மொழி ஒரு மன்னாய ஒரு நாகரிகத்திற்கு உட்பட்ட காப்பியங்களுக்குள் ஒப்புமை காட்டிப் பேசுவார் எழுதுவார் படும் வெறுப்புக்களை நாம் அறியாதவர்கள் அல்லர். ஒப்புமை நெறியால் ஏதோ ஒரு நூல் குறைவாகத் தோன்றுகின்றது. இஃது ஒர் இலக்கிய நெறி என்று எடுத்துக் கொள்வார் அரியராக உளர்.

ஓர் ஆசிரியன் எழுதிய ஒரு நூலுக்குள்ளேயே ஒப்புமை நெறி புகுந்து விட்டது. இராமாயணத்தில் சுந்தரகாண்டமே சிறந்தது என்று அதனையே பூச்சாத்தித் தொழுது முன் படிப்பவர் பலர். பாலகாண்டம் தேவையில்லை என்று கூறுவாரும் உளர். ஒப்புமை நெறி அறவே கூடாது என்பது என் கருத்தன்று. எந்த நெறியும் ஒரு நூலின் உண்மையை, அகத்தன்மையை வெளிக்கொணர்தற்குப் பயன்படவேண்டும். அப்பயன் வரும் அளவிற்கு ஒப்புமுறையை ஆளலாம். வெறும் ஒப்புமை நோக்கம் கல்வி விளம்பரம் ஆகுமேயன்றி நூலாசிரியன்தன் கருத்து வெளிப்பாடு ஆகாது.

வெவ்வேறு காப்பியங்கள் எழும்போது வெவ்வேறு புதுக் கூறுகள் வருதல் இயல்பு. காப்பியத் தொடக்கம் எப்படி இருக்க வேண்டும்? பிறப்பு முதல் தொடங்குவதா? வேறு வகையாகத் தொடக்கஞ் செய்யக் கூடாதா? சிந்தாமணி சீவகன் பிறப்பிலிருந்தா தொடங்குகின்றது? சீவகன்தன் தந்தை பிறப்பிலிருந்தே தொடங்குகின்றது என்று சொல்லலாம். சிந்தாமணிக்கு மணநூல் என்று ஒரு பெயர் உண்டு. அது சீவகன் மணவினைகளை மட்டும் கூறவில்லை; அவன்தந்தையின் மணத்தையும் கூறுகின்றது. நாமகள்