பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியப் பார்வை

23


இராமாயணத்தைக் காப்பிய இலக்கியம் என்ற கண்ணோடு பாராவிட்டால், கம்பரை இழக்கின்றோம்; கம்பர் காட்டும் உண்மையை இழக்கின்றோம். மேலும், காப்பியங்களை முறையோடும் முழுமையோடும் கற்காவிட்டால் புதிய படைப்புக்கள் ஒருமொழிக்கு எவ்வாறு தோன்றும்?

ஓரளவாயினும் முழுமை யுணர்ச்சியை வளர்க்க வேண்டும். பாடம் வைக்கும்போது ஒரு படலத்தையேனும் முழுமையாக வைக்கக் கூடாதா? 50 செய்யுள் 100 செய்யுள் என இராமாயணத்திலிருந்து வைத்தால் அந்த ஐம்பதும் நூறும் தொடர்ந்த பாடல்களாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. அப்போதுதான் காப்பியவுணர்வு மாணாக்கர்களுக்குத் தோன்றும். நல்ல பாடல்கள் என்று தொகுத்தால் கம்பரின் மனவோட்டம் விட்டுக்காட்டும். தோள்கண்டார் தோளே கண்டார் என்றபடி, தனிப்பாடலைக் கண்டார் தனிப்பாடலையே கண்டார், படலங்கண்டார் படலத்தையே கண்டார் என்ற குறுநிலைக்குக் காப்பியம் குறைந்து வருகின்றது.

இலக்கியம் பல வகைப்படும். வகைக்கேற்ற உணர்ச்சி முகிழ்க்க வேண்டும். சிறுகதை படிப்பார்க்குச் சிறு கதையுணர்வும், புதினம் படிப்பார்க்கப் புதினவுணர்வும் நாடகம் படிப்பார்க்கு. நாடகவுணர்வும் தோன்றுதல் போல் காப்பியம் படிப்பார்க்குக் காப்பியவுணர்வும் தோன்ற வேண்டும். சிறப்புவகை யுணர்வு தோன்றாது இலக்கியப் பொதுவுணர்வு மாத்திரம் தோன்றுவது இலக்கிய வளர்ச்சிக்கு உரஞ் செய்யாது. ஏதோ பாடபேதம் பார்க்கின்றவர்கள், பேதப் பதிப்பு வெளியிட ஆராய்பவர்கள் ஓரளவு முழுப்பார்வை நாடுகின்றனர். பலர் பார்வை படலப் பார்வையாக - உதிரிப் பார்வையாக - அங்கொன்று இங்கொன்றும் பார்வையாகப் போய்க்கொண்டிருக்கின்றது. கம்பர் பரவுகின்றார் என்றால் 'க' பரவுகின்றது, 'ம்' பரவுகின்றது, 'ப' பரவுகின்றது, 'ர்' பரவுகின்றது. என்று வேடிக்கையாகச் சொல்ல்த்தோன்றுகின்றது. முழுப்பார்வை - காப்பியத்தின் இலக்கணமான தொடர்புப் பார்வை வரவரக் குறைந்துபோயிற்று என்பது மட்டுமன்று; தொடர்பான முழுப் பார்வையே வேண்டியதில்லை என்ற அளவிற்குக்கூடப் போய்விட்டோம். இது கவலுதற்கு உரிய இலக்கியப் போக்கல்லவா?

முழுப்பார்வை வளரவேண்டுமெனின் ஒரு நூலை முழுமை முழுமையாக, தொடர்பு தொடர்பாகச் சில முறையேனும் படிக்க வேண்டும். இக்காலத்து ஒரு நூல் கற்பவர்கள் படிக்கும்போதே நல்ல பாடல்கள் என்று தாம் தாம் கருதுவனவற்றைக் குறித்துக் கொண்டு