பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கம்பர்


தொகுத்துக் கொண்டு நூலை விட்டுவிடுகின்றார்கள். இது முற்றும் தகாது என்பது என் கருத்தன்று. இஃது ஒருவகைப் படிப்பு முறை என்றுகூட ஒத்துக் கொள்வேன். இப் படிப்பு முறையாவது பெரும்பாலார்பால் வளரட்டும் என்று கூட வாழ்த்துவேன். எனினும் காப்பியவுண்மையை எதற்கும் பலி கொடுக்கக் கூடாது. தனி மரம் எவ்வளவு வானுற ஓங்கி வளர்ந்திருந்தாலும் தோப்பாகாது. எவ்வளவு நயப் பாடலாக இருந்தாலும் தனிப் பார்வை காப்பியப் பார்வையாகாது. அந் நயப்பாடலும் காப்பியத்தின் உறுப்பெனக் கொண்டு தொடர்பழகு காணவேண்டும். காணும் சூழ்நிலை, காணத்தக்க காலவமைதி, காணவல்ல அறிவுக் கூறு நமக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் காப்பியத்தைக் கற்கும் நெறி தொடர்புநெறி என்ற திறனை நாம் உடன்பட வேண்டும்.

இராமாயணப் பதிப்பு

முழுப்பார்வை செலுத்தாமையால் இராமாயணத்தின் காப்பிய நலன்களை நாம் காணாது இழப்பது ஒரு புறம் இருக்க, இராமாயணத்துக்குத் தூயபதிப்பு இன்மையினாலும் சில கேடு சூழ்கின்றோம். இப்போது போகின்ற போக்கிற் சென்றால், இன்னும் இராமாயணத்துக்கு என்னென்ன தோன்றல் திரிதல் கெடுதல் விகாரங்கள் வருமோ என்று அஞ்சுகின்றேன். இப்படித்தான் கம்பர் பாடியிருக்க வேண்டும் என்று சொற்களையும் அடிகளையும் புதிதுபுதிதாகப் படைத்து நுழைத்த பதிப்புக்களைப் பார்க்கின்றோம். இராமாயணம் பாடமாக இல்லாத வகுப்புக்கள் இல்லை. அப்பாடப் பதிப்புக்களில் அடிக்கடி சொற்கள் மாறுகின்றன. செய்யுட்களை அக்கக்காகப் பிரித்து இராமாயணப் பதிப்புகள் மலிவாக நலிவாக வெளிவருகின்றன. இப்பிரிவுப் பதிப்புக்களில் உள்ள அறியாப் பிரிவுகள் பல. மேலும் பாடல் பாடலாகத் தள்ளுபடிகள் வேறு செய்யப்படுகின்றன. கவிதையோட்டம் தடைப்படுமாறு ஏராளமான குறியீடுகள் இடையிடையே மடுக்கப்படுகின்றன. இவை கம்பரின் கருத்தோட்டத்தையும் தடைப்படுத்தி விடுகின்றன என்பதைப் பலர் உணரவில்லை.

இராமாயணச் செம்பதிப்பு ஒன்று உருவாக்குவதற்கு நம் பல்கலைக்கழகம் அரிய முயற்சி பல்லாண்டுகளாகச் செய்து வருவது கண்டு மகிழ்கின்றேன். அறிஞர் குழு அமைத்து நூற்றுக்கணக்கான ஏட்டுச் சுவடிகளையும் பதிப்புக்களையும் ஒத்துப் பார்த்துச் செலவு பாராது பெரும் பெரும் பதிப்புக்களை வெளியிட்டு வருகின்றது. பாட பேதங்கள் வரம்பின்றி மண்டிக்கிடத்தலின்,