பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கம்பர்


இப்போது பல பதிப்புக்கள் வெளிவராமல் இல்லை. எப்படியாவது நல்லதொரு நிலை பேறான பதிப்பைக் கொண்டு வந்துவிடவேண்டும் என்றுதான்.கம்பரன்பர்கள் குழுவாகக் கூடி நன்முயற்சி செய்கின்றனர். ஏட்டுச் சுவடிகளைத் தேடித் தொகுத்து இராமாயணப் பணி ஆற்றுகின்றனர். ஆனால் இம்முயற்சிகளின் விளைவென்ன? 'பழைய குருடி கதவைத் திறடி' என்றது போல், ஒவ்வொரு குழுவின் பதிப்புத் தோறும் பேதங்களின் மலிவையே காண்கின்றோம். இராமாயணக் குழுக்கள் பல தோன்றி மறுபடியும் மறுபடியும் பேதப்பதிப்புக்கள் பிறக்குமாயின், மூல ஆராய்ச்சியிலேயே அறிஞர்கள் காலமெல்லாம் கழியுமாயின், இராமாயணத்தின் வளர்ச்சி வருங்காலத்துச் சிதறுண்டு போகும். காப்பியப் பார்வை மங்கிப் போகும். இதற்கு ஒரு நேர்வழி காணத்தான்வேண்டும் என்று என் உள்ளம் துடிக்கின்றது. இக்காலத்துக் காணத்தவறின் என்றுமே தவறிப்போமோ என்று என் நெஞ்சம் பதறுகின்றது. அரிய ஒரு காப்பியத்தைப் பெற்றும் உரிய ஒரு பதிப்பைப் பெற்றிலோமே என்று என் மனம் கவல்கின்றது.

செம்பதிப்பு

தமிழில் பாடபேதம் கொண்ட நூல் இராமாயணம் மட்டும் அன்று. திருக்குறளில், தொல்காப்பியத்தில், சங்கத் தொகை நூல்களில், சிலப்பதிகாரத்தில், சீவக சிந்தாமணியில் எல்லாம் மாறுபாடங்கள் இல்லாமல் இல்லை. இப்பாடங்கள் மேலும் பெருகாமல், காலந்தோறும் புகாமல், உரையாசிரியர் தடுத்துவிட்டனர். ஒரு பாடத்தை மூலத்தில் தழுவிக்கொண்டு உரை வரைவர். மாறுபாடங்கள் இருக்கமேல் உரையிடைக் காட்டுவர். நல்ல பாடங்களுக்கும் இஃது உரையென வரைவர். அல்ல பாடங்களாயின் இப்பாடம் சரியன்று என மறுத்து ஒதுக்குவர்; இங்ஙனம் பாடம் கூறுவாரும் உளர் என்று சிற்சில இடங்களில் சுட்டிச் செல்வர். உரையாசிரியர்கள் பண்டைத் தமிழ் நூல்களுக்குச் செய்த ஒரு பெருந்தொண்டு மூலச் செம்மையாகும்.

பரிமேலழகர் என்ற உரைஞாயிறு தோன்றியிராவிட்டால் திருக்குறள் மூலம் பல மூலங்களாகிவிடும். அவர்தம் உரைச் சிறப்பால், இன்று எவ்வளவு வகைவகையான பதிப்புக்கள் வெளிவரினும் மூலம் ஒன்றாகத் காண்கின்றோம். மூவாயிரம் ஆண்டுப்பழமையுடைய தொல்காப்பியத்துக்குக்கூடச் செம்பதிப்பு உண்டு. இஃது இளம்பூரணரின் உரைப்பயன். ஆதலின் ஒன்றை இந்த இராமாயணப் பொழிவின்கண் அழுத்தமாக மொழிய விரும்புகின்றேன். இராமாயணத்துக்கு வெவ்வேறு வகையில் பல்வகைப் பதிப்புக்கள் வரலாம். ஆனால் மூல வேறுபாடான