பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் ᏮᏋ X->==== காதலும் பெருங்காதலும் பெருங்காதல், காம நோய் ஆகியவற்றைக் கம்பன் மிக நயமாக அற்புதமான ஒரு காட்சியாக விவரித்துக் கூறுவதைக் காண்கிறோம். இராமாயண மகா காவியத்தில் இராவணனுக்குச் சீதைபால் எற்பட்ட காம வெறியும், பெரும்காதலும் அதன் விளைவாக அவன் சீதா பிராட்டியை அபகரித்து அசோகவனத்தில் கொண்டு வந்துச் சிறை வைத்ததும், அதைத் தொடர்ந்து இராமன் சீதையைத் தேடிவந்து வானரப் படையின் உதவி கொண்டு இலங்கை மீதுப் படையெடுத்து அரக்கர் படையை வென்று இராவணனைக் கொன்றுச் சீதையை மீட்பது இக்காவியத்தின் அடிப்படையான செய்தியாகும். 10. மாயமான் இராவணன் தன் மாமனான மாரீசனிடம் வந்து, மாயமான் வேடம் பூண்டு சீதையின் மனதைக் கவர வேண்டும்’ என்று கூறினான் சீதையைக் கவரும் முயற்சி வேண்டாம் என மாரீசன் எவ்வளவோ புத்தி கூறியும் இராவணன் கேட்கவில்லை. தான் சொல்வதைச் செய்யுமாறு ஆணையிட்டான். மாரீசன் மாயமான் வடிவம் கொண்டு சீதை முன் தோன்றினான். பொன்மானைக் கண்டு மயங்கிச் சீதை அதைப்பிடித்துத் தரும்படி இராமனை வேண்டினாள். அது ஒரு மாயமான் என்பதை உணர்ந்த இலக்குவன் இது ஒரு மாயமான் போலத் தென்படுகிறது, இது வேண்டாம்” என்று எவ்வளவோ கூறியும் சீதை பிடிவாதமாக மானைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் வேண்டினாள். இராமனும் சீதையின் மீதுள்ள அன்பின் மிகுதியால் அவள் விரும்பியதைப் பெற்றுத்தர நினைத்துப் பொன்மானைப் பிடிக்கச் சென்றான். அந்த மாயமானோ இராமனுக்குப் போக்குக் காட்டி அவனை வெகு தூரம் இழுத்துச் சென்றது. அந்த மாயமானின் செய்கையைப் பற்றிக் குறிப்பிடும் போது "குன்றிடை இவரும், மேகக் குழுவிடம் குதிக்கும், கூடச் சென்றிடின் அகலும்; தாழின் தீண்டலாம் தகைமைத்து ஆகும்; நின்றதே போல் நீங்கும், நிதிவழி நேயம் நீட்டும், மன்றல் அம்கோதை மாதர் மனம் எனப் போயிற்று, அம்மா’’