பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 80 வேண்டிய தேற்பட்டு விட்டதே இந்த நிலை கற்புடைப் பெண்டிரில் வேறு யாருக்கு ஏற்பட்டிருக்கும்? என்று நினைத்து வருந்துகிறான். கணவன் இறந்த போது தான் கற்புடைப் பெண்டிர் தங்கள் அணி கலன்களைக் கழற்றுவது நமது நாட்டுப் பழக்கங்களில் ஒன்றாகும். இவ்வாறு நினைத்து சீதைக்கு நான் இருக்கும் போதே இந்தக் கதி ஏற்பட்டு விட்டதே என்று இராமன் வருந்துகிறான். ஒரு பெண்ணிற்கு யாராவது துன்பம் விளைவித்தால் வழியில் செல்பவர்கள் கூடத் தலையிட்டு அவளைக் காப்பாற்றுவார்கள். ஆனால் என்னையே நம்பி இருந்தவளை என்னால் அவளுடைய துயரத்தைத் தீர்க்க முடியவில்லையே என்று இராமன் வருந்துகிறான். “ஆறுடன் செல்பவர், அம் சொல்மாதரை வேறுளார் துயர் செயின், விலக்கி செம்சமத்து ஊறு உறத்தம் உயிர் உகுப்பர்; என்னையே தேறினள் துயரம் நான் தீர்க்க கிற்றிலேன்' பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடப்பதும், அத்தகைய வன்முறைகளை எதிர்த்து அவைகளைத் தடுப்பதும் அவ்வாறு துன்பமடைந்தவர்களைக் காப்பாற்றுவதும் நல்லோர்களின் கடமை யாகும் என்னும் கருத்தும் இங்கு வெளிப்படுவதைக் காண்கிறோம். என்னுடைய தந்தையின் மெய்ம்மையைக் காப்பாற்றுவதற்காக எனது தந்தையின் மீது பழி ஏற்படாமல் இருப்பதற்காக நான் மகுடம் சூட மறுத்தேன். இப்போது கரும்பின் சுவையைப் போன்ற சொல்லழகு உடைய சீதையை ஒரு பகைவன் கொண்டு செல்ல அவளைக் காப்பாற்ற முடியாத பழி என் மீது விழுந்திருக்கிறது. நான் தவறு இழைத்து விட்டேன். அதிலிருந்து நான் தப்ப முடியாது என்று இராமன் வருந்துகிறான். 'விரும்பு எழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல், வரும்பழி என்று யான் மகுடம் சூடலேன்; கரும்பு அழிசொல்லியைப் பகைஞன் கைகொளப் பெரும்பழி சூடினேன்; பிழைத்தது என் அரோ?” சீதையைப் பற்றிக் குறிப்பிடும் போது இராமன் என்னையே தேறினள், என்னை நம்பியே இருந்தவள், என்றும் கரும்பு அழி சொல்லியை கரும்பு ரசத்தை மிஞ்சிய இனிமையான சொற்களைக் கொண்ட சீதை என்றும் கூறுவதில் சீதை மீது இராமனுக்குள்ள நிறைந்த அன்பை உயிருக்கு உயிரான காதலைக் குறிக்கிறது.