பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 243 கொல்லப்பட்ட காரணத்தால் பழி வாங்கும் நோக்கத்தில் இராவணனை சீதைபாலான காம வெறியில் சிக்க வைத்தாள் என்றும் கதையில் பேசப்படுகிறது. இராவணனுக்கு சீதையின் மீதான பெண்ணாட்டம் பெண்ணாசை, பெண்கள் பால் வைத்த பெரு நேயம், ஆசை மிகுதி, காதல் மிகுதி, காம வெறி, பெருங்காதல் ஆகியவை காவியத்தின் முக்கிய பகுதியாகும். அநேகமாக இராமாயண மகாகாவியத்தின் சரிபாதி பகுதியை இராவணனுடைய இச்செயல்கள் பரவி நிற்கின்றன. சீதையைக் கவருவதற்கு இராவணன் எடுத்த முயற்சியின் தொடக்கத்திலேயே அக்காரியத்திற்கு இராவணனுக்கு உதவி செய்த மாரீசனே இராவணனுடைய முயற்சிக்கு மறுப்பு தெரிவித்து அம்முயற்சி வேண்டாமென்றும் சொல்லிப் பார்க்கிறான். இராவணன் சீதையை வான வெளியில் கொண்டு செல்லும் போது வழியில் கழுகரசன் சடாயு, அவனைத் தடுத்துப் போரிட்டு இராவணனுடைய தெய்வீக வாளால் வெட்டுப்பட்டுக் கீழே விழுகிறான். முதல் தடை ஏற்படுகிறது. சீதை அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டுப் பின்னர், இராவணன் பல முறை அங்கு சென்று சீதையிடம் கெஞ்சுகிறான். தன் ஆசையை வெளிப்படுத்திச் கூறுகிறான். பின்னர் அச்சுறுத்துகிறான் மிரட்டுகிறான். பல விதமான சாகசங்களும் செய்து அவளைச் சம்மதிக்க வைக்க முயலுகிறான். ஒவ்வொரு முறையும் சீதை அவனுக்கு அறிவுரை கூறிக் கடுமையாகப் பேசிப் புத்தி புகட்ட முயற்சிக்கிறாள். நிகழ்ச்சிகளின் நெடுகிலும் இராவணனுடைய செயலைக் கண்டித்தும் ஆட்சேபித்தும் அறிவுரை கூறியும் பலரும் பேசினர். இராவணனுக்கு அடுத்த அவனுடைய தம்பி கும்பகருணன், தன் அண்ணனுடைய ஆசையை அவனுடைய செயலைக் கண்டித்து பேசினான். அவனுடைய அடுத்த தம்பி வீடணன் மிக்க வணக்கத்துடன் இராவணனுக்கு அறிவுரை கூறிச் சீதை இலக்குமியின் அவதாரம் என்றும் இராமன் திருமாலின் அவதாரம் என்றும் திருமாலின் அவதாரப் பெருமைகளையும் இரணியன் வரலாற்றையும் நாராயண மந்திரத்தின் பெருமைகளையும் எடுத்துக் கூறி இராவணனுக்குப் புத்தி புகட்ட முயற்சிக்கிறான்.