பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 261 கண்டான். அவன் கம்பீரமாகப் பத்துத் தலைகளையும் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். பல இடங்களில் தேடியும் சீதையைக் காணாமல் சிந்தை நொந்து கூறுகிறான். 'கொன்றானோ? கற்பு அழியாக் குலமகளைக் கொடும் தொழிலால் தின்றானோ? எப்புறத்தே செறிந்தானோ சிறை; சிறியோன் ஒன்றானம் உணரகிலேன்; மீண்டினிப் போய் என் உரைக்கேன்? பொன்றாத பொழுது எனக்கு இக்கொடுந்துயரம் போகாது; ஆல்’ என்று வருந்தினான் ஆயினும் எண்ணியது முடிக்கிலேன் என்று உறுதி பூண்டு மேலும் பல இடங்களையும் கண்டு விட்டுக் கடைசியில் மலர்ச் சோலை ஒன்றைக் கண்ணுற்றான். அசோக வனத்தில் அரக்கிகளின் காவலுக்கிடையில் சீதை இருப்பதை அனுமன் கண்டான். தேடினேன், கண்டேன், என்று ஆடினான், பாடினான் உவகை கொண்டான். “மாசுண்ட மணி அனாள், வயங்க வெங்கதிர்த் தேசுண்ட திங்களும் என்னத் தேய்ந்துளாள்; காசு உண்ட கூந்தலாள் கற்பும் காதலும் ஏசுண்டது இல்லையால்; அறத்துக்கு ஈறுண்டோ?” என்றும். “தருமமே காத்ததோ? சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ? கற்பின் காவலோ? அருமையே! அருமையே! யார் இது ஆற்றுவார்? ஒருமையே எம்மனோர்க்கு உரைக் கற்பாலதோ? என்று நினைந்து மரச் செறிவிலே அனுமன் மறைந்திருந்தான் என்று கம்பர் மிக அருமையாகக் குறிப்பிடுகிறார். அந்த நேரத்தில் இராவணன் தனது பரிவரங்களுடன் வந்து சீதையிடம் தனது விருப்பத்திற்கு இணங்குமாறு முதலில் இனிமையாகப் பேசுகிறான். கெஞ்சிக் கேட்கிறான்.