பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் | அதைப்பார்த்து அந்த வால்மீகியைப் பின்பற்றிக் கம்பன் தமிழில் இக்காவியத்தை எழுதினார் என்று கம்பராாயணத்தின் தோற்றம் பற்றிய ஒரு தனிப்பாடல் கூறுகிறது. "நாரணன் விளையாட்டெல்லாம் நாரத முனிவன் கூற ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான் சீர் அணி சோழநாட்டுத் திருவழுந் தூரில் வாழவோன் கார் அணி கொடையான் கம்பன் தமிழினால் கவி செய்தானே என்பது அந்தப் பாடலாகும். கம்பன் தான் செய்த நூலின் வரலாற்றைப் பற்றிக் கூறும் போது “தேவ பாடையின் இக்கதை செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினார் உரையின்படி நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பு” என்று குறிப்பிடுகிறார். மூவரானவர் என்பது இங்கு வான்மீகி, வசிட்டர், வியாசர் என்றும், வசிட்டர் பாடியது வசிட்ட இராமாயணம் என்றும், வியாசர் செய்தது அத்யாத்ம ராமாயணம் என்றும், வியாசரை நீக்கிப் போதாயணரைச் சேர்த்து மூவர் என்றும் போதாயனர் செய்தது போதாயண இராமாயணம் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். முந்திய நாவினார் உரையின் படி என்று கம்பன் கூறியிருப்பதால் அதை வாய் மொழியாக மக்களிடம் நிலவி வந்த கதைப் போக்கு களையும் கம்பர் தன் கருத்தில் எடுத்துக் கொண்டார் என்று கூறுவோரும் உண்டு. தமிழ் நாட்டில் தமிழ் மக்களிடமும் சங்க நூல்களிலும் இராம காதை பற்றிய பல வழக்குகளும் குறிப்புகளும் உள்ளது பற்றியும், அவை அனைத்தையும் படித்தும் தொகுத்தும், காலத்திற்கேற்ற வாறு மாற்றியும் செழுமைப்படுத்தியும் கம்பர் தனது காவியத்தை எழுதியுள்ளார் என்பதைத் தமிழ்ப் பேரறிஞர் பேராசிரியர் மு.இராகவய்யங்கார் தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். கம்பர் தனது இராமாயண காவியத்தின் பால காண்டத்தில் நாட்டுப் படலத்தில்.