உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

வித்துவான்களுக்கு யாதொரு அதிருப்தியும் உண்டாகவில்லை. பண்டிதசிகாமணியான மகாமகோபாத்தியாயர் சுவாமிநாதய்யர் பதிப்பித்திருக்கும் சங்க நூல்கள் சீர் பிரித்தேதான் அச்சிடப்பட்டிருக்கின்றன. புங்கத்தூர் கந்தசாமி முதலியாரும் கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்தையும், ஆரணிய காண்டத்தையும் பதம் பிரித்தேதான் அச்சிட்டிருக்கிறார் *[1] ஆகவே கற்போரின் சௌகரியத்துக்காகச் சந்திகளைப் பிரிப்பதும் சீர்களைப் பிரிப்பதும் தவறல்ல என்று பெரியோர்களே வழிகாட்டி யிருக்கிறார்கள். இதற்குமேல் நாம் செய்ய உத்தேசித்த மாற்றங்களைச் செய்வதானது அவர்கள் போயிருக்கிற மார்க்கத்தில் முடிவு வரையில் செல்லுகிறதே தானாகிறதாகையால், அவ்விதம் செய்வது வித்துவான்களுக்கு அயுக்தமாகத் தோன்றாது என நிச்சயித்து, அவ்விதமே செய்யத் துணிந்தோம்.


  1. கந்தசாமி முதலியார் தமது அயோத்தியா காண்டப் பதிப்பில் அச்சிட்டிருக்கிற விளம்பரம் வேடிக்கையாயும் அதே காலத்தில் உண்மைப் பொருள் நிரம்பியதாயும் இருப்பதால் அதை இங்கே மாற்றாமல் அப்படியே எடுத்து எழுதுகிறோம் ! இதனாலே சகலருக்கும் தெரியப்படுத்துகிறது என்ன என்றால், இந்த ஸ்ரீமத் கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்தில் 100ஆம் பக்கம் தொடங்கி, பின் தொடர்ந்து வருகிற அந்தந்தத் திரு விருத்தத்திலும், அடிதோறும் உள்ள சொற்கள் எல்லாத்தையுமே, எழுத்துச் சந்தி பண்ணாமலும் விகாரப் படுத்தாமலும், அடி தொடை தோக்கியும், வேண்டும் இடம் அறிந்தும் சில துகளை மாத்திரம் எழுத்துச் சந்தி பண்ணியும் விகாரப் படுத்தியும், மற்றதுகளை எல்லாம் சந்தி பிரித்தும் அச்சிற் பதிப்பித்து இருக்கிறோம். அப்படி ஏதுக்காக செய்யப்பட்டது என்றால், இதற்கு முன்னமே லோகோபகாரம் ஆக, எம்மால் அச்சில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்ற சில சுவடிகளை பார்வை இட்டவர்களில், இந்த பிராந்தியத்து பிரபுக்களும் வித்துவான்களும் புலவர்களும் கவிராயன்மார்களும் உபாத்தியாயர்களும் ஆயிருக்கிற சில பெயர்கள் அந்த சுவடிகளில் பயன் இல்லாத சந்தியையும் விகாரத்தையும் விலக்கி, பயன் உள்ள சந்தியையும் விகாரத்தையும் வைத்துக்கொண்டு, அதுகள் அச்சிற் பதிப்பிக்கப்பட்டிருக்கையினாலே, இத்தமிழ் ஆனது, லோகத்துக்கு உபகாரம் ஆக வேணும் என்று நமது முன்னோர்கள் நினைத்தபடிக்கு நாங்கள் பிரயோசனம் கண்டோம். ஆகையால் அப்படியே இதிலும் செய்யப்படவேணும் என்று எம்மைக் கேட்டுக்கொண்டார்கள்.. இதுவும் அல்லாமல் தமிழ் இலக்கணம் படித்தும், பல சொற்களுக்கும் உறுப்புகளுக்கும் சொன்ன பொது விதிகளையும் சில சொற்களுக்கும் உறுப்புக்களுக்கும் சொன்ள சிறப்பு விதிகளையுங்கொண்டு, இன்ன இடத்திலே சந்தியாவது விகாரமாவது வேண்டும், இன்ன இடத்திலே அது வேண்டாம், என்று ஓர்ந்து உணர்ந்து, பயன் உள்ள சந்தியையும் விகாரத்தையுமே அனுசரித்து, நமது முன்னோர்கள் கருதியபடிக்கு, லோகோபகாரத்தை நிலை நிறுத்தாமல், பயன் இல்லாத் சந்தியையும் விகாரத்தையுமே எங்கெங்கும் அனுசரிக்கப் புறப்பட்டு, அந்த லோகோபகாரத்தை நிலை கெடுக்கிற இளங் கல்விமான்கள் பல பெயர்கள் இருக்கிறார்கள். அவர்களை சந்திப் பேய் அறையாமலும், விகாரவெறி பிடியாமலும், அவர்களுக்கு தெளிவு உண்டாகி, கலகம் தீரும்படியாய், இந்த சந்தியையும் விகாரத்தையும் குறித்து, சந்தி விளக்கம் என்று ஒரு நூல் செய்யவேணும் என்றும்கூடக் கேட்டுக்கொண்டார்கள். அவர்களாலே கேட்டுக்கொள்ளப்பட்ட இந்த இரண்டும் லோகோபகாரமா இருக்கையால், யாமும் அதுகளுக்கு உடன் பட்டோம். அதற்காக, கற்றவர்களுக்கே செம்பாதிபொருள் விளங்காது என்று லோகவதந்தி ஆகியிருக்கிற, இந்த ஸ்ரீமத் கம்பராமாயணத்திலே, மேற்படி சத்தியையும் விகாரத்தையும் தகுந்தபடி. பிரிவினை செய்தால், அது முழுதுப் பொருள் விளங்கும் என்று எண்ணி, முதலிலே அயோத்தியா காண்டத்தில் அறுபதாம் பக்கம் தொடங்கி, தேர்ந்த ஒரு நல்ல கல்விமான் ஆனவர் ஒருவரிடத்தில் தாம் கற்ற போதும், தாமே கற்கிறபோதும், தாம் ஒருவனுக்குக் கற்பிக்கும்போதும், தமக்கும் கேட்போர்க்கும் பொருள் வினங்கி, இவர் கற்றவர் தாம் என்று கேட்டோர் தம்மை மதிக்கும்படியாய், எப்படி சந்தியையும் விகாரத்தையும் விலக்கி பதங்களைப் பிரித்துப் படிப்பாரோ, அப்படியே பிரித்து அச்சிற் பதிக்கப்பட்டிருக்கிறது ......"

    இவர் பிரித்திருக்கிற மாதிரி பின் வருமாறு:
    வெயில் இள நிலவே போல் விரிகதிர் இடைவீச
    பயில் மரம் நிழல் ஈனப்பனி புரை துளிமேகப்
    புயல் தர இளமென் கால்பூ அளவிய தெய்த
    மயில் இனம் நடம் ஆடும் வழி இனியன போனார்.

    அயோத்தியா காண்டம்— வனம்புகு படலம்.

    தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
    தீய்வினை என்ன நீத்துச்சித்தனை முகத்திற்றேக்கிப்
    போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
    ஆயிரம் இராமர் நின்கேள் ஆவரோதெரியின் அம்மா.

    அயோத்தியா காண்டம் குகப்படலம்.