பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

இன்ன இன்ன அமிசங்களை நிச்சந்தேகமாக நம்பலாம் என்று நிர்ணயிப்பது மிகவும் கடினமான காரியம். இருப்பினும், அந்த மகா கவியின் சரித்திரத்தில் உண்மையாக இருக்கலாம் என்று கொள்ளக்கூடிய அமிசங்கள் பின்வருபவைதாம் என்று ஒருவாறு நிச்சயித்து எழுதுகிறேம்.

கம்பன் ஜாதியில் உவச்சன், அதாவது 'காளி' கோயில் பூசாரி. அவன் தகப்பன் பெயர் ஆதித்தன், அவன் பிறந்தது திருவழுந்தூர். காலத்தில் அவன் திருவெண்ணெய் நல்லூரில் சடையன் என்னும் ஒரு வள்ளலை அடுத்து, அவனால் மதித்தற்கரிய நன்மைகள் பெற்று, அவனுக்கு உயிர்த் துணைவனாக வாழ்ந்து வந்தான்.

கம்பன் தனது கவித்திறமையை முதலில் காட்டியது வேளாளரைப் பாடிய ஏரெழுபது என்னும் நூலிலாம். சரஸ்வதியந்தாதி, மும்மணிக்கோவை என்ற நூல்களும் கம்பனால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன. ஆனால் அவை எக்காலத்தில் பாடப்பட்டன என்று சொல்ல முடியவில்லை. இப்பொழுது இறந்துபோய்விட்டாலும் இன்னும் எத்தனையோ பாட்டுகளும் நூல்களும் கம்பன் பாடியிருக்க வேண்டியது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவனுடைய வாக்கின் செழுமையைப் பார்த்துவிட்டுத்தான் சடையப்ப வள்ளல் அவனை ராமாயணத்தைத் தமிழில் பெருங் காப்பியமாகப் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கவேண்டும்.* [1]


  1. *கம்பன் நெடுநாள் வரையில் காவியத்தைத் துவக்காமலே இருந்துவிட்டதாகவும், அதைக்கண்டு சடையன் எப்படியாவது, கம்பனை ராமாயணம் பாடும்படி செய்துவிட வேண்டும் என்று சோழனை வேண்டிக்கொள்ள, அவன் கம்பனையும். ஓட்டக்கூத்தனையும் போட்டியில் விட்டால் நலமாயிருக்கும் என நினைத்து அவ்விருவரையும் ராமாயணம் பாடும்படி ஆக்ஞாபித்ததாகவும் கர்ண பரம்பரை கூறும்.