பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

ராமாயணத்தைப் பாடப் பல வருஷங்களாகி யிருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. பிறகு அங்கங்கேயுள்ள வித்துவான்களுக்கு அதைப் படித்துக்காட்டி அவர்களுடைய சாற்றுக் கவிகளைப் பெற்றுக் கொண்டு கடைசியில் அவன் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீமந் நாதமுனிகளும் மற்றுமுள்ள மகான்களும் பண்டிதர்களும் நிறைந்த சபையினில் தன் ராமாயணத்தை ஆதியோடந்தமாக வாசித்து அரங்கேற்றிக் கவிச் சக்ரவர்த்தி எனப் பட்டப்பெயரும் பெற்றான். அரங்கேற்றுவதற்கு முந்தி நம்மாழ்வார்மீது ஒரு அந்தாதி பாடி வைத்தான் என்றும் சொல்லப்படுகிறது.

கம்பனுடைய கவித்திறமை சோழ ராஜனுக்குத் தெரிந்தது முதல் அவனை அவன் தனது சபைக்கு வர வழைத்துக்கொண்டு அவனுக்கு ராஜோபசார தேவோபசாரங்களும் செய்து வந்தானாம்.

கம்பனுக்கு அம்பிகாபதி என்று ஒரு மகனிருந்தான். அவனும் ஒரு கவி. அவன் சோழன் மகளை விழைந்தான் என்றும் அதற்காகச் சோழன் அவனைச் சிரச்சேதம் செய்தானென்றும் சொல்லப்படுகிறது. அம்பிகாபதியைத் தவிர கம்பனுக்குக் காவேரி என்று ஒரு மகளும் இருந்தாளாம். அவளைச் சோழன் மகன் விரும்பி வரம்பு கடக்க முயன்றானாம். அப்பொழுது அவள் தன் கற்பைக் காப்பதற்கு வேறு மார்க்கமில்லாமல் வீட்டு முற்றத்திலுள்ள கம்பங் குழியில் இறங்கித் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுவிட்டாளாம்.

இந்தக் கதைகள் உண்மையாயிருக்கும் பக்ஷத்தில் கம்பனுக்கும் சோழனுக்கும் மனஸ்தாபம் உண்டாவதற்கு வேறு காரணங்கள் வேண்டாம். ஆனால் காரணம் எதுவாக இருந்தாலும், கம்பன் சோழன் மீது கோவித்துக் கொண்டு, ஏகாங்கியாய்ப் புறப்பட்டு, தேச தேசாந்தரங்களெல்லாம் சுற்றினான் என்று எல்லாக்