இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13
கர்ணபரம்பரைகளும் ஒத்துக் கூறுகின்றன. அந்த ஊர்களிலெல்லாம் கம்பன் தனது ஊர் பெயர் முதலானது ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் சாதாரண மனிதன் போலவே பிரயாணம் செய்தான். கடைசியில் அவன் ஒரு பலவானான அரசன் சபையில் போய்ச் சேர்ந்து அங்கே அஞ்ஞாதவாசமிருந்துகொண்டே தனது 'ராமாயணத்தைப்' பிரசங்கித்து வரும் நாளில், அவனை அவ்வரசன் கம்பன் என்று தெரிந்து கொண்டதும் அவனிடத்துப் பேரன்பும், மரியாதையும் காட்டி, அவனுக்கு யானை, குதிரை, பரிவாராதிகள் பரிசாகத் தந்து அவனை ராஜபோகத்தில் வைத்துவிட்டான்.*[1]
இப்படிச் சில வருஷங்கள் செல்லக் கடைசியில் கம்பனுக்குத் தன் சுதேசத்தைப் பார்க்கவேண்டுமென்கிற ஆசையுண்டாகி அதன்பேரில் அவன் அவ்-
- ↑ இந்த அரசன் பெயர் பிரதாபருத்திரன் என்று தமிழ் நாவலர் சரிதை கூறும். ஆனால் இன்னொரு கர்ண பரம்பரை கம்பன் அஞ்ஞாதவாசமிருந்தது சேர அரசன் அவையில் என்று சொல்லுகிறது. தன்னுடைய கவித்திறமையை அறிய முடியாத ஆந்திர அரசன் சபைக்குக் கம்பன் சென்றான் என்று கூறும் கர்ணபரம்பரையை ஒப்புக்கொள்ளுவது நமக்குக் கடினமாக இருக்கிறது. மூன்று இடங்களில் கம்பன் தெலுங்கு மொழிகளைப் பிரயோகித்திருப்பதினின்று கம்பன் தெலுங்கிலும் பண்டிதனாயிருந்திருக்கவேண்டும் என்று தீர்மானித்து ஸ்ரீமான் ரா. ராகவையங்கார் இதற்குப் பொருத்தம் கூறுகிறார். இவை பாடப் பிழைகளல்ல, உண்மையில் தெலுங்கு மொழிகளே என்று ஏற்பட்டாலும்கூடக் கம்பனுக்குத்தான் சிறிது தெலுங்கும் தெரியும் என்று ஏற்படுமே ஒழிய, பிரதாபருத்திரனுக்கும் அவன் அவையத்தாருக்கும் தமிழில்க்கியங்களைக் கேட்டு அனுபவிக்கும் சக்தி இருந்தது என்று ஏற்படாது. ஆகையால் கம்பன் சேர அரசனிடம் சென்றான் என்று கொள்ளுவது தான் நியாயம் என்று தோன்றுகிறது.