பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

களின் கதியையடைந்து விட்டது. ஆகையால் அவைகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழில் சுவை ஏற்படுவதில்லை; தமிழ் ஞானமும் மிகக் குறைவாகத்தான் உண்டாகிறது. ரஸம் அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு நூல்கள் படிப்போரின் தொகை அருகிப் போய்விட்டது. அதிலும் தமிழ் நூல்களில் உண்மையான கவியின்பம் தேடுவோரின் தொகை ஒரு நூறு வரையில் கூடப்போகுமா என்பது சந்தேகமாகத்தானிருக்கிறது. அப்படியிருக்க, இன்று தேதியில் கம்பராமாயணத்தை ஆசையோடு படித்து அனுபவிப்போரை இரண்டு கை விரல்களில் எண்ணிவிடலாம் என்று சொல்லுவது மிகையாகாது எனத் தோன்றுகிறது.

இதற்கு வேறு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், பிரதானமான காரணம் கம்பராமாயணமானது சாதாரண படிப்புள்ளவர்களுக்குப் - பொருள்படாது என்ற எண்ணம் பரவியிருக்கிறதுதான். ஆனால் கம்பனைப் படித்துப் பொருள் கண்டுபிடிப்பதற்குப் பெரிய இலக்கணப் படிப்பு வேண்டாம். ஒரு மகா வித்துவானிடம் போய்ப் பல வருஷங்கள் அப்பியசிக்க வேண்டாம். சாதாரணமான தமிழ்க் கல்வியினால் வருகிற செய்யுள் நடை அறிவும், பதச்சேதம் செய்யும் திறமையும், இயற்கையறிவும் உலகானுபவத்தால் வருகிற பாவ ஞானமும் இருந்தால் போதும், கப்ப ராமாயணத்தைப் படித்து அதில் பொதிந்து கிடக்கும் கவியின்பத்தை அனுபவிக்கலாகும்.

ஜனங்களுக்குக் கம்பராமாயணம்[1] என்றால் மலைப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால் வேறொன்றுமில்லை, அந்த மகா காவியம் இது


  1. கம்பராமாயணத்தைப் பற்றி இங்கு சொல்லும் வார்த்தைகள் நமது இதர இலக்கியங்களுக்கும் பொருந்தும்.