பக்கம்:கரிகால் வளவன்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

வரிசையில் சேர்ந்தவர். இது மட்டும் அன்று; அரசியின் சகோதரர் அவர். அவருடைய பாதுகாப்பில் அரசியை விடுவதில் யாருக்குத்தான் தடை இருக்கும்?

பல காலம் வள வாழ்வில் தான் வாழ்ந்து வந்த அரண்மனையை விட்டுச் சென்றாள் அரசி. கண்ணீரும் கம்பலையுமாக அவள் பிரிந்த காட்சி சான்றோர்களின் உள்ளத்தை உருக்கியது. “வருத்தம் அடையாதீர்கள். நீங்கள் தாங்கியிருக்கும் மாணிக்கம் தக்க காவலில் இருக்கவேண்டுமென்ற எண்ணத்தால்தான் உங்களே அனுப்புகிறோம். திருடர்கள் வந்து சாரும் இடத்தில் வைர மணிப் பெட்டகத்தை வைக்கலாமா? உங்களுக்குத் திருமகன் பிறந்துவிட்டால் மீண்டும் இந்த அரண்மனை வாழ்வு உங்களுக்குக் கிடைக்கும்” என்று அரசிக்கு ஆறுதல் கூறினார்கள். அவள் உள்ளத்துக்குள் ஏதோ நம்பிக்கை இருந்தது. தனக்கு மகன்தான் பிறப்பான் என்ற உறுதி இருந்தது. ஆனால் கடவுள் சித்தம் வேறாக இருந்தால்—? அதை நினைக்கும்போதே அவள் உடம்பு நடுங்கியது. அவள் வாழ்ந்த வாழ்வென்ன! அரசன் உயிரோடிருந்தால் அவள் இருக்கும் நிலை என்ன! எல்லாம் கனவாகத் தோன்றின.

உலகத்தின் கண்ணுக்கும் காதுக்கும் எட்டாத ஓரிடத்திலே அரசி தன்னிடம் புதைந்திருந்த மாணிக்கத்தை அடைகாத்து வந்தாள். இரும்பிடர்த் தலையார் ஒவ்வொரு கணத்தையும் முள்மேல் இருப்பவர்போலக் கழித்தார். ‘குழந்தை கருவில் வந்த போதே தந்தையைக் கொன்றுவிட்டதே! இது