பக்கம்:கரிகால் வளவன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

"எப்படி ஆனாலும் சரி; குழந்தை இன்னும் இரண்டு நாழிகை கழித்துப் பிறக்கவேண்டும்” என்று கெஞ்சும் குரலில் கூறினர் புலவர்.

“சரி, பணிப்பெண்ணை வரச் சொல்லுங்கள். அவளிடம் வேண்டியதைச் சொல்கிறேன்.”

பணிப் பெண் வந்தாள். கிழவர் அவளிடம் சில முறைகளைச் சொன்னார். “அரசியைச் சாதாரண நிலையிலே படுக்க வைத்திருக்கக் கூடாது” என்றார். கால் மிகவும் மேலே இருக்கும்படி கட்டி விடவேண்டும் என்றார். பாவம்! அவ்வளவுக்கும் உட்பட்டாள் அரசி. அவளைத் தலைகீழாகத் தொங்க விடுவது ஒன்றுதான் குறை. அவள் மார்பு அடைத்தது. உடம்பு முழுவதும் என்னவோ செய்தது. உயிரே போய்விடும்போல் இருந்தது. ஆனாலும் அவள் அதற்கு உட்பட்டாள். தன் மகன் அரசாள வேண்டும் என்ற ஆவலினால் அத்தனை செயலுக்கும் உட்பட்டாள்.

நேரம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. இரும்பிடர்த்தலையாருக்கோ மன வேதனை. அவர் புழுவைப் போலத் துடித்தார். ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகம் போல் இருந்தது. அவருடைய தங்கையைப்பற்றி என்ன சொல்வது? அவளுடைய உள்ளம், உடல், உயிர் இந்த மூன்றும் துடித்தன. அவள் பட்ட துன்பத்தை எந்தத் தாய்தான் படுவாள்?

அப்பா இரண்டு நாழிகைக் காலம் ஆயிற்று. அரசி விடுதலை பெற்றாள். பழைய படுக்கையில் படுத்தாள். இரும்பிடர்த்தலையார் ஒரு காட்டாற்றை நீந்தினார். ஆனால் அடுத்த ஆறு பயமுறுத்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/17&oldid=1340565" இலிருந்து மீள்விக்கப்பட்டது