பக்கம்:கரிகால் வளவன்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

வரக்கூடிய அபாயத்தைத் தெரிந்துகொண்டிருந்தான். காளைப் பருவம் வரவில்லை; சின்னப் பையன் தான். ஆனாலும் ஓரளவு தன்னைத்தான் காத்துக் கொள்ளும் திறமை அவனுக்கு இருந்தது.

அன்னை எங்கெங்கோ தேடினாள்; அழுதாள்; கதறினாள். தெரிந்தவர்களை எல்லாம் அழைத்துத் தேடச் செய்தாள். தெரியாதவர்களையும் கெஞ்சிக் கும்பிட்டு அங்க மச்ச அடையாளங்களைச் சொல்லித் தேடச் சொன்னாள். வளவன் அகப்படவில்லை. உயிர்க்கழுவில் நின்று துடித்தாள் தாய். அவளுடைய நெட்டைக் கனவெல்லாம் எப்படி ஆகிவிடுமோ? குழந்தைக்காக அல்லவா அவள் உயிரோடிருக்கிறாள்? பெண்ணாகப் பிறந்தவள் ஊரைக் கடந்து ஓடிப்போய்த் தேட முடியுமா? கனலில் விழுந்த புழுவைப் போலத் துடிதுடித்தாள். தன் தலைவிதியை நொந்து அரற்றினாள். குழந்தை போனவன்தான்; வரவில்லை.

மறுநாள் இரும்பிடர்த்தலையார் வந்தார். வரும் போதே அவருக்கு வீடு விளக்கமற்றிருப்பது தெரிந்தது. உள்ளே புகுந்தாரோ இல்லையோ, “அண்ணா! இனிமேல் நான் என்ன செய்வேன்” என்று தலைவிரி கோலமாக அரசி அவர் காலில் வந்து விழுந்தாள்.

“குழந்தை எங்கே?”

இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு நான்கு புறமும் பார்த்தார் புலவர்.

“குழந்தையைப் பறிகொடுத்துவிட்டேனே!” என்று அழுதாள் அவள்.

2