பக்கம்:கரிகால் வளவன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

“நான் புறப்படும்பொழுது நன்றாகத்தானே இருந்தான்? அதற்குள் அவனுக்கு என்ன வந்தது?”

“ஐயோ! அவனை நேற்றிலிருந்து காணவில்லை. எந்தப் பாவி தூக்கிக்கொண்டு போனானோ! என்ன செய்தானே! என் கண்மணி உயிரோடு இருக்கிறானோ, இல்லையோ ஐயோ! நான் என்ன செய்வேன்!”

ஒரு கண நேரம் இரும்பிடர்த்தலையார் செயலற்று நின்றார். உலகமே சுழன்றது. பிறகு எல்லாம் அப்படியே திடீரென்று இயக்கம் ஒழிந்து நின்றுவிட்டதுபோல் இருந்தது. நின்று நிதானித்தார். அவர் எதிர்பார்த்ததுதான் இது. இது நேரக்கூடாதென்று எத்தனையோ கட்டுக்காவலாக இருந்தார். ஆனாலும் விதி யாரை விட்டது? நடப்பது நடந்தே தீரும்.

இந்த அலங்கோல நிலையில் அவருக்கு ஒரு சிறிய ஆறுதல் ஏற்பட்டது. அவர் முதலில் அஞ்சியது போல, இளவரசன் இறந்து போகவில்லை. யாரோ வஞ்சகருடைய சூழ்ச்சியால் மறைந்து விட்டான். தாய் புண்ணியம் செய்திருந்தாளானால், சோழர்குலம் புண்ணியம் உடையதானால், சோழ நாடு பாக்கியம் பெற்றதானால், இன்னும் நம்பிக்கைக்கு இடம் உண்டு.

இளைஞன், தக்க பருவம் வராதவன் வளவன். ஆனால் எளிதிலே ஏமாந்து போகிறவன் அல்லன். சோழர் குலத்தின் வீரக்குருதி அவன் நரம்புகளில் ஓடியது. சோழர் கொடியான புலியைப்போல அவன் பதுங்கிப் பாயும் திறமையுடையவனாகலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/24&oldid=1340578" இலிருந்து மீள்விக்கப்பட்டது