பக்கம்:கரிகால் வளவன்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

அறிந்தார்கள். மேற்கொண்டு ‘முளையிலே கிள்ளி எறியும்’ வேலையிலே முனைந்தார்கள். அதன் பயனாகத்தான் இளவரசன் திருமா வளவன் முரடர்கள் கையிலே சிக்கினான்.

ஏதோ ஓரிடத்துக்கு அவனைக் கொண்டு போனார்கள். ஒரு வீட்டில் அடைத்து விட்டார்கள்.

பாவம்! இளம் பாலகன்; உலகம் இத்தகையதென்றே அறியாதவன்; உலக விரிவைக் காணக் கொடுத்து வைக்காதவன்; கூட்டிலே வளரும் சிங்கக் குட்டியைப்போல வளர்ந்தவன்; தான் வாழும் பெரிய சிறையை விட்டுப் பகைவர் புகுத்திய சிறிய சிறையில் இப்போது கிடந்தான். அங்கே அன்னை இருந்தாள்; அம்மான் இருந்தார். இங்கே என்ன இருந்தது? இருள் இருந்தது; பகைவர்களின் கொடுமை இருந்தது.

இந்த இடத்திலிருந்து மீள வழியுண்டா என்று ஆராய்ந்தான். மேலே கூரை வேய்ந்திருந்தது. பெரிய கட்டிடம் அல்ல; சிறிய வீடு அது. மனிதர்கள் பேசும் குரலே காதில் விழவில்லை. வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு வெளியேற முடியுமா? அது முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. கத்திப் பார்த்தான். “மாமா! அம்மா!” என்று அழைத்தான். யாரும் ஏனென்று கேட்கவில்லை.

காட்டுக்கு நடுவில் அந்த இடம் இருக்க வேண்டுமென்று தோன்றியது. உண்மையில் சோழ நாட்டிலே அவ்விடம் இருக்கவில்லை. சோழ நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடையில் கருவூரை அடுத்த ஒரு சிறிய காட்டில் திருமா வளவனைச் சிறை செய்திருந்தார்கள் பாவிகள்!