பக்கம்:கரிகால் வளவன்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

பரப்பியிருந்தார்கள். அரசன் இன்றி எவ்வளவு காலம் நாட்டைப் பாதுகாக்க முடியும்? மக்களும் பொறுமையின் எல்லையைக் கண்டுவிட்டனர்.

இந்த நிலையில் இரும்பிடர்த்தலையார், சில நாட்களுக்கு ஒரு முறை வருபவர், சில காலமாக வரவே இல்லை. அவரைக் கண்டும், அவர் கூறும் செய்திகளைக் கேட்டும் நம்பிக்கை பெற்று, ஆட்சியைக் கவனித்து வந்த அமைச்சர்களுக்கு இப்போது கவலை உண்டாயிற்று. பகைவர்களின் பலம் வர வர அதிகமாவதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். “என்ன ஆயிற்றோ” என்ற ஐயம் அவர்கள் உள்ளத்தே தோன்றி அரித்து வந்தது. இரும்பிடர்த்தலையாரோ வரவில்லை. ஒரு செய்தியும் தெரியாமல் அலைகடல் துரும்பு போல மனம் சுழன்று தடுமாறினார்கள்.

நாள்தோறும் புதிய அபாயம் சோழ நாட்டுக்கு ஏற்பட்டு வந்தது. சேரனுடைய ஒற்றர்கள் இன்ன ஊருக்கு வந்தார்கள் என்ற செய்தி ஒரு நாள் வரும். பாண்டியன் படைவீரர் மாறு வேடம் பூண்டு கூட்டமாகச் சோழ நாட்டின் தென்பகுதி ஊர்களில் தங்கியிருக்கின்றனர் என்ற செய்தி ஒரு நாள் வரும். சோழ நாட்டில் வாழும் சிலர் கூடி, அரசன் இல்லாத இந்த நிலையை மாற்றவேண்டும் என்று கிளர்ச்சி செய்ய முயல்வதாக ஒரு செய்தி வரும். இவ்வாறு மன அமைதியைக் கலக்கிக் குடலைக் குழப்பும் சமாசாரங்கள் அலை அலையாக வந்து மோதும்போது அமைச்சர்கள் என்ன செய்வார்கள்? ‘இனி நாட்டின் நிலை என்ன ஆகுமோ?’ என்ற அச்சம் புரையோடிக்கொண்டிருந்தது.