பக்கம்:கரிகால் வளவன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

கருத்தைச் சோழ நாடு அறியும்படி வெளியிட்டனர். ‘இறைவன் திருவருளால் நமக்குத் தக்க மன்னன் கிடைப்பான்’ என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டாயிற்று.

ஒரு நல்ல நாளில் கழுமலத்தில் இருந்த களிற்றை அலங்கரித்துக் கடவுள் திருவருளை எண்ணிக் கட்டவிழ்த்து விட்டனர். காலாற நடை பழகாமல் இருந்த களிறு வேகமாகப் புறப்பட்டது. அதைத் தொடர்ந்து பலர் சென்றனர். களிறு மேற்குத் திசையை நோக்கிச் சென்றது. திருவருட் சக்தியே அதனை உந்திக்கொண்டு போவது போல இருந்தது. அங்கங்கே உள்ள மக்கள் யானையைக் கண்டு வழிபட்டனர். இறைவன் திருவருளை ஏந்தும் வாகனமாக அதனை எண்ணித் துதித்தனர். ஒவ்வோர் ஊரையும் கடந்து சென்றது யானை. சோழ நாடு முழுவதும், “இறைவன் திருவருள் என்ன செய்யப் போகிறதோ!” என்ற ஆர்வப் பேச்சு எழுந்தது. “எந்த ஊரில், எந்தக் குடிசையில் நம்மை ஆளப் போகும் மன்னன் பிறந்திருக்கிறானோ!” என்று பேசிக்கொண்டனர் மக்கள். யானை மேற்குத்திசையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

“ஒருகால் சேர நாட்டுக்கே போய்ச் சேர மன்னனையே வரித்து விடுமோ!” என்றனர் சிலர். யானை அவ்வளவு வேகமாகச் சோழ நாட்டின் மேற்கெல்லையை அணுகிக்கொண்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் யானை புறப்பட்ட செய்தியை அறிந்து, முடிவை அறியும் ஆவலோடு இருந்தனர் மக்கள். சேர நாட்டாரும் பாண்டிய நாட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/37&oldid=1232477" இலிருந்து மீள்விக்கப்பட்டது