பக்கம்:கரிகால் வளவன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ருங்கூடச் சோழ நாட்டின் மன்னராக யார் வரப் போகிறாரென்று அறியும் ஆர்வமுடையவராக இருந்தனர்.

மேற்கே கருவூருக்கு வந்துவிட்டது யானை. அவ்வூரில் உள்ள மக்கள் இதை எதிர்பார்க்கவில்லை. கொங்கு நாட்டைச் சார்ந்த கருவூர் அப்போது சேர நாட்டின் பகுதியாக இருந்தது. சோழ நாட்டுக்குச் சேர நாட்டில் உள்ளவன் மன்னனாகப் போகிறானோ? யானை சேர நாட்டின் எல்லைக்குள் வந்துவிட்டதே!

யானை கருவூரைத் தாண்டிச் செல்லவில்லை, அந்த ஊருக்குள்ளே புகுந்தது. என்ன ஆச்சரியம்! மறைவாகக் கரிகாலன் வாழ்ந்திருந்த சிறு குடிலின் முன்வந்து நின்றது. ஊரே கூடிவிட்டது. கரிகாலன் வீட்டிலிருந்து வெளியே வந்தான். களிறு உடனே அவன் கழுத்தில் மாலையை இட்டது; தன் கையால் எடுத்து மத்தகத்தின்மேல் வைத்துக்கொண்டது. அவ்வளவுதான்; வெகு வேகமாகப் புறப்பட்டு விட்டது.

இரும்பிடர்த்தலையார் இவற்றை யெல்லாம் கண்டார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. முதலில் பயப்பட்டார். பிறகு தெளிந்தார். ‘அபாயம் நம்மைத் தேடி வந்துவிட்டது’ என்று முதலில் திடுக்கிட்டார். ‘திருவருள் கை கொடுக்க வந்தது’ என்பதைப் பின்பு தெரிந்து கொண்டார்.

திருவருள் எதைச் செய்யவேண்டுமோ அதையே செய்துவிட்டது. பட்டத்து யானை யாரைத் தன் மேல் ஏற்றிக்கொள்ள வேண்டுமோ அவனையே ஏற்றிக்கொண்டு சென்றது. கரிகாலன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/38&oldid=1232478" இலிருந்து மீள்விக்கப்பட்டது