பக்கம்:கரிகால் வளவன்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

யிலே மேலும் மேலும் மோத வேண்டுமென்ற தந்திரம் கரிகாலனுக்குத் தெரியும். வேளிர்படை இருந்த பக்கத்தில் ஊன்றித் தாக்கினான். என்ன இருந்தாலும் கூலிப் படைதானே? வரிசை வரிசையாகக் கால் வாங்கத் தொடங்கியது. பலர் சோழப் படைவீரருடைய படைக்கலங்களுக்கு இரையாயினர். வேளிர் பதினொருவரும் ஒருவர்பின் ஒருவராக மாய்ந்தனர். அடுத்தபடி பாண்டியன் படையைத் தாக்கினான் கரிகாலன் சேரன் படையோடு தளர்வின்றி ஒருபால் சோழப் படையினர் போரைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். அங்கே யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி என்று அறியவொண்ணாத நிலை இருந்தது. பாண்டியன் படையை அதிக வேகத்தோடு எதிர்ப்பதில் கரிகாலன் முனைந்தான். பாண்டி நாட்டுப் படையும் தளர்ந்தது. பாண்டியன் பட்டான்.

இப்போது பின்னும் ஊக்கத்தோடு சோழ மன்னன் சேரப் பெரும்படையை எதிர்க்கத் தொடங்கினான். பல போரில் வென்ற சேரன் பெருஞ்சேரலாதனுக்கு முன்னே கன்னிப் போரைச் செய்யும் கரிகாலன் நின்றான். சேரனுக்குப் படைப் பலமும், அநுபவமும் துணை நின்றன. கரிகாலனுக்கு வீரரின் அன்பும், திருவருளும், இணையில்லாத ஊக்கமும், அறிவுப்பலமும் துணை நின்றன. சோழப் படையில் இருந்த தளபதிகள் குலை நடுங்கினர். கரிகாலனுக்கு ஏதாவது நேர்ந்தால் என்ன செய்வதென்று பயந்தனர். கரிகாலனே மிடுக்குடன் போரிட்டான். கடைசியில் அவன் விட்ட அம்பு பெருஞ்சேரலாதனுடைய மார்பிலே பாய்ந்-