பக்கம்:கரிகால் வளவன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

தது. அவன் வீழ்ந்தான். வீழ்ந்தவனை அவனுடைய படைத்தலைவர்கள் தூக்கிச் சென்றனர். வீழ்ந்தவர்களோடு போர் செய்தல் அறமன்று. ஆகவே, போர் நின்றது. சோழ மன்னனுக்கு வெற்றி கிடைத்தது.

பெருஞ்சேரலாதன், அம்பு பட்டு வீழ்ந்தவன் இறந்து படவில்லை. அவனை வஞ்சிமா நகரம் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். கரிகாலன் விட்ட அம்பு அவன் மார்பைத் துளைத்து உடம்பை ஊடுருவி முதுகு வழியே சென்றுவிட்டது. சுத்த வீரர்களுக்கு மார்பில் புண் இருப்பது அழகு; முதுகில் புண் இருப்பது இழுக்கு. போரில் புறங்காட்டி அப்போது பாய்ந்த அம்பினால் புறப்புண் அமைதல் வீரத்துக்கு இழுக்கு என்று சொல்லுவார்கள். ஆனால் எந்த வகையிலும் புறத்தே புண் உண்டானால் அதனாலே வாழ்தல் தவறு என்று பெருஞ்சேரலாதன் எண்ணினான். “அந்த அம்பு என் உயிரை வாங்காவிட்டாலும் என் புறத்தே புண்ணே நிறுத்திவிட்டுப் போயிற்று. புறப்புண்ணை வைத்துக்கொண்டு வாழமாட்டேன். விரதம் இருந்து உயிரை விடப்போகிறேன்” என்றான். உடன் இருந்தவர்கள் என்ன என்னவோ சொல்லிப் பார்த்தார்கள். மான வீரனாகிய சேரன் அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. வடக்கிருந்து உயிர் நீக்க நிச்சயித்துவிட்டான். அப்படியே தன் நகரத்துக்கு வடக்கே நெடுந்துாரம் சென்று ஓரிடத்தில் அமர்ந்து உணவும் நீரும் இன்றி உடம்பை வாட்டிப் புகழுடம்பு பெற்றன்.

கரிகாலன் கன்னிப் போரில் வெற்றி மகளைக் கைப்பற்றினான். அவன் புகழ் எங்கும் பரவியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/49&oldid=1232486" இலிருந்து மீள்விக்கப்பட்டது