பக்கம்:கரிகால் வளவன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

நினைத்தால் எந்தக் காரியந்தான் கைகூடாது? தமிழ் நாட்டில் உள்ளவர்கள் இனிப் பல ஆண்டுகளுக்கு எதிர்த்துப் போரிட முன் வர மாட்டார்கள் என்ற நிச்சயம் வளவனுக்கு ஏற்பட்டது. அப்படியானால் இவ்வளவு படையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

தமிழ் நாட்டில் பகையின்றிச் செய்து கொண்டதுபோல, வடநாட்டிற்கும் சென்று யாரேனும் பகைமை காட்டினால் வென்றும், நட்புப் பூண்டால் ஏற்றும் வரலாம் என்ற யோசனை கரிகாலனுக்கு அப்போது உண்டாயிற்று. அமைச்சர்களையும் சான்றோர்களையும் படைத் தலைவர்களையும் அழைத்து அவர்களுடன் தனியிருந்து ஆலோசனை செய்தான். படைத்தலைவர்கள் யாவரும் வட நாட்டுக்குச் செல்ல வேண்டுமென்பதை ஆதரித்தனர். அவர்களுடைய தோள் தினவு இன்னும் தீரவில்லை. மன்னனும் தளபதிகளும் அவ்வளவு ஊக்கத்துடன் இருக்கும்போது அமைச்சர்கள் தடை கூற நியாயம் ஏது? ஆகவே, வடநாட்டுக்குப் படையுடன் செல்வதென்று முடிவு செய்தார்கள்.

நாளும் கோளும் பார்த்துப் புண்ணிய திசையாகிய வடக்கே நோக்கிப் புறப்பட்டான் கரிகாலன். போகும் வழியில் எதிர்ப்பு ஒன்றும் இல்லை. நேரே ஒவ்வொரு நாடாகக் கடந்து சென்றான். இமயம் அளவும் செல்ல வேண்டுமென்ற ஆர்வம் அவனுக்கு உண்டாயிற்று. அவனுடைய நெஞ்சத் திண்மை எல்லாவற்றையும் சாதிக்கத் தக்கதாக இருந்தது. படைகள் தடையின்றிச் சென்றன. எங்கும் போரே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/53&oldid=1205668" இலிருந்து மீள்விக்கப்பட்டது