பக்கம்:கரிகால் வளவன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வென்று சிறகை அடித்தது. கழுத்து மயிரைச் சிலிர்த்துக்கொண்டது, வெகு வேகமாக ஓடி வந்து கரிகாலன் ஊர்ந்து சென்ற பட்டத்து யானையின் காலைக் கொத்தியது. அது வந்த வேகமும் கொத்திய கோபமும் யானையைத் திடுக்கிடச் செய்துவிட்டன. மாறி மாறி நாலு காலிலும் கொத்தியது, கோழி. கரிகாலன் அதைப் பார்த்து மருண்டான். உடன் இருந்த வீரர்கள் கோழியை அடிக்க முயன்றபோது கரிகாலன் அவர்களைக் கை அமர்த்தினான்.

சில கணம் இப்படி யானையைத் தாக்கிய கோழி பிறகு ஓடி மறைந்து விட்டது. இந்த நிகழ்ச்சி கரிகாலனுடைய உள்ளத்தைக் கலக்கியது. அவன் யானைமீதிருந்து கீழே இறங்கினான். பெரிய போரிலும் மயங்காத யானை மயங்கி நிற்பதும், அதன் காலில் கோழியின் மூக்குப் பட்ட இடங்களில் இரத்தம் கசிவதும் கரிகாலன் கண்களிலே பட்டன. அவனுக்கு அவமான உணர்ச்சியோ கோபமோ உண்டாகவில்லை. வியப்புத்தான் உண்டாயிற்று. ‘சின்னஞ் சிறு கோழி இவ்வளவு பெரிய யானையை, மக்கள் புடைசூழ்த்திருக்கும் சமயத்தில் தைரியமாக வந்து கொத்துகிறதே! அதற்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்க வேண்டும்! இந்தக் கோழியே இவ்வளவு வலிமை உடையதானால் இந்தப் பக்கத்து மனிதர்கள் எப்படி இருப்பார்கள்! இந்த நிலத்தில் ஏதோ தனிச்சிறப்பு இருக்கிறது’ என்று கரிகாலன் எண்ணலானான்.

உடன் வந்தவர்களைக் கொண்டு அங்கே அருகில் ஏதேனும் ஊர் இருக்கிறதா என்று விசாரிக்கச் சொன்னான். அருகில் உறையூர் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/62&oldid=1232490" இலிருந்து மீள்விக்கப்பட்டது