பக்கம்:கரிகால் வளவன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

றுநாள் உரிய காலத்தில் அறங்கூறவையம் கூடியது. சான்றோர்கள் வந்து அவையத்தில் அமர்ந்தார்கள். அரசன் வரும் நேரமாயிற்று. இன்னும் அவன் வரவில்லை. அப்போது யாரோ ஒரு முதியவர் அவையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவருடைய தலை நன்றாக நரைத்திருந்தது. அவைக்குள் வந்தவுடன் அரசன் அமரும் ஆசனத்தில் அவர் அமர்ந்தார். சான்றோர்கள் அவரைக் கவனித்தார்கள். அமர்ந்தவர் தலை நிமிர்ந்து யாவரையும் பார்த்தார். “என்னைத் தெரியவில்லையா?” என்று கேட்டார். அந்தக் கேள்வி அவர் இன்னார் என்பதைத் தெரிவித்து விட்டது.

கரிகால் வளவனே முதியவரைப்போல வேடம் புனைந்து வந்திருந்தான். “இவன் இளமையை உடையோன்; உரை முடிவைக் காணமாட்டான்” என்று முதல் நாள் சில நரைமுது மக்கள் சொல்லிக் கொண்டார்களே, அவர்கள் உவக்க வேண்டுமென்று தானும் நரைமுடித்து வந்திருந்தான்.

கரிகாலனே அப்படி வந்திருக்கிறான் என்பதை உணர்ந்த சான்றோர்கள், “என்ன இது!” என்று வியப்பு மீதூரக் கேட்டார்கள்.

“உங்களுக்கு நடுவில் நான் மட்டும் இளையவனாக இருந்தால் நன்றாக இருக்குமா? உங்களுடைய அநுபவம் எனக்கு உண்டாக வேண்டுமானால் இன்னும் பல ஆண்டுகள் ஆகவேண்டும். அதன் பிறகு இந்த அவையத்துக்கு வருவது முடியுமா? ஆகவே, இப்போதே புறத்தோற்றத்திலாவது உங்களைப்போல இருக்கலாமென்று எண்ணிக் கோலம் புனைந்தேன்” என்றான் மன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/70&oldid=1232495" இலிருந்து மீள்விக்கப்பட்டது