பக்கம்:கரிகால் வளவன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

அரசன் அவரை வரவேற்று உபசரித்தான். சில காலம் அரண்மனையில் அப்பெண்மணியார் தங்கினார். அவர் சோழநாடு நில வளமும் நீர் வளமும் நிரம்பப் பெற்று விளங்குவதை உணர்ந்தவர்; மற்றவர்கள் அந்த வளங்களைப் பற்றிக் கூறுவதையும் கேட்டவர்.

ஆதலின் அந்த வளப்பங்களை யெல்லாம் அமைத்து ஒரு பெரிய கவியைப் பாடவேண்டுமென்று எண்ணினார். கரிகால் வளவன் சிறப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் விரும்பினர். தமிழில் ஒருவருடைய புகழை வெளிப்படுத்தப் பல வழிகள் இருக்கின்றன. வள்ளல்களிடம் பரிசு பெற்ற ஒருவர் பரிசு பெறும் இடம் தெரியாமல் அலையும் மற்றவர்களைப் பார்த்து, “நீங்கள் இன்னாரிடம் போனால் உயர்ந்த பரிசில் கிடைக்கும்” என்று சொல்லி அவர்களிடம் போவதற்கு வழி காட்டும் முறையில் புலவர்கள் சில நூல்களைப் பாடியிருக்கிறார்கள். அந்த வகையான நூலுக்கு ஆற்றுப்படை என்று பெயர். பரிசிலைப் பெறப் போகிறவர்கள் புலவர், பாணர், பொருநர், விறலியர், கூத்தர் என்று பலவகையாக இருப்பார்கள். இவர்களில் யாரைப் பார்த்துச் சொல்வதாகப் பாட்டு அமைகிறதோ அவர்கள் பெயரால் அந்த நூலுக்குப் பெயர் அமையும். புலவரைப் பார்த்துச் சொல்வதாக இருந்தால் புலவராற்றுப்படை என்று அதைச் சொல்வார்கள். இப்படியே பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை,விறலியாற்றுப்படை, கூத்தராற்றுப்படை என்று மற்றவற்றுக்குப் பெயர்கள் அமையும். முடத்தாமக் கண்ணியார் பொருநர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/73&oldid=1232497" இலிருந்து மீள்விக்கப்பட்டது