பக்கம்:கரிகால் வளவன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

பாலையாகிக்கொண்டு வரும் காடு அது. நடந்து நடந்து அவர்களுக்குக் கால் சலித்துவிட்டது. ஒரு மரம் அங்கே வழியிலே இருந்தது. அதில் மாத்திரம் சில இலைகள் இருந்தன. இலை செறிவாக இல்லை. அதனால் மரத்தின் கீழே அடர்ந்த நிழலைக் காணவில்லை; வலையை விரித்தாற்போல அந்த நிழல் இருந்தது. அதாவது கிடைத்ததே என்று அந்தப் பொருநனும் அவனுடைய பரிவாரங்களும் அங்கே சற்று அமர்ந்தார்கள்.

அப்போது கரிகால் வளவனிடம் சென்று அவன் அளித்த விருந்தை உண்டு மகிழ்ந்து பரிசில் பெற்றுக்கொண்டு மற்றொரு பொருநன் அங்கே வந்தான். மரத்தின் நிழலில் பொருநனும் அவனைச் சார்ந்த பட்டினிப் பட்டாளமும் இருப்பதைக் கண்டான். அவர்கள் நிலையைக் கண்டு இரங்கினான். ‘நாமும் இவர்களைப் போல இருந்தோமே! கரிகால் வளவனைக் கண்ட பிறகுதானே நம் கலி நீங்கியது? இவர்களையும் அவனிடம் போகும்படி சொன்னால் இவர்களுக்கும் நன்மை உண்டாகுமே!’ என்று எண்ணினான். உடனே அங்கே இருந்த ஏழைப் பொருநனைப் பார்த்து இந்தப் பணக்காரப் பொருநன் சொல்லத் தொடங்கினான்.

“பொருநர் தலைவனே, உன்னையும் உன் சுற்றத்தாரையும் நான் வரும் வழியிலே கண்டது, உங்கள் புண்ணியப் பயன் என்றே சொல்ல வேண்டும்.”

அமர்ந்திருந்த பொருநன், யாரோ பெரிய செல்வர் நம்மைப் பார்த்துப் பேசுகிறாரே! என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/75&oldid=1232498" இலிருந்து மீள்விக்கப்பட்டது