பக்கம்:கரிகால் வளவன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அணிந்ததையும் சொன்னீர்கள். உணவு கொள்ள வில்லையோ?” என்று கேட்டான்.

அதற்குள் அவசரப்படுகிறீர்களே! பக்குவமாக வெந்த ஊனோடு கலந்த விருந்தைப் பக்கத்தில் இருந்து, அதைச் சாப்பிடுங்கள், இதைச் சாப்பிடுங்கள் என்று சொல்ல நான் உண்டேன்; சுடச்சுடச் சாப்பிட்டேன். ஒருவகை உணவு சலித்துவிட்டதானால் வேறு வகையான பணிகாரங்களைத் தந்தார்கள். முனை முரியாத அரிசியினால் சமைத்த சோற்றை உண்டேன். இப்படித் தினமும் விருந்து உண்டு உண்டு என் பற்கள் கூடத் தேய்ந்து போய்விட்டன. பல நாள் அங்கே தங்கியிருந்தேன். பிறகு விடை பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணிக் கரிகால் வளவனிடம், எங்கள் ஊருக்குப் போய்வருகிறோம் என்று மெல்லச் சொன்னேன். அப்போது அவனுக்கு வந்த கோபத்தைப் பார்க்கவேண்டுமே!”

கோபமா? எதற்காகக் கோபம்?” என்று ஏழைப் பொருநன் கேட்டான்.

“உண்மையான கோபம் அல்ல. கோபம் வந்தது போலக் காட்டினன். எங்களை விட்டுப் போகப் போகிறீர்களா? என்று கேட்டான். நான் போக வேண்டுமென்று தீர்மானித்திருப்பதைத் தெரிந்துகொண்டான். அவனுக்கு வருத்தந்தான். உடனே யானை முதலிய பரிசில்களைத் தந்தான். அவன் பல பொருள்களைக் காட்டினான். நான் வேண்டியவற்றையெல்லாம் வாரிக்கொண்டேன்.”

“கரிகால் வளவன் பெருஞ்செல்வம் உடைய வள்ளலோ?” என்று கேள்வி வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/78&oldid=1232501" இலிருந்து மீள்விக்கப்பட்டது