பக்கம்:கரிகால் வளவன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அவனுடைய அன்புக்கு ஈடாக எதனையும் சொல்ல இயலாது.”

இப்படிச் சொன்ன பொருநன் கரிகாலனுடைய சோழ நாட்டை வருணித்து, “இத்தகைய நாட்டையுடைய கரிகாலன் உனக்குப் பரிசில்களைத் தருவான்” என்று சொல்லித் தன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.

முடத்தாமக் கண்ணியார் பொருநனுடைய கூற்றாகச் சொல்லும் இந்தப் பாட்டில் சோழ நாட்டின் வளத்தை விரிவாக அமைத்திருக்கிறார்.

சோழநாடு முழுவதும் வயல்கள் இருக்கின்றன. நிலத்தில் விளையும் நெல்லை, அந்த நிலத்தின் ஒரு பக்கத்தில் உள்ள திடலில் சேர் கட்டிச் சேமித்து வைத்திருக்கிறார்கள் வேளாளர்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த நெற்கட்டுகள் நிரம்பியிருக்கின்றன. அங்கங்கே தென்னந் தோப்புகள் இருக்கின்றன. அங்கே குடிமக்கள் வாழ்கிறார்கள். உழவருடைய பெண்கள் மணலைக் குவித்து விளையாடுகிறார்கள். மயில்கள் பாகற்பழத்தையும் பலாப் பழத்தையும் கொத்தித் தின்கின்றன. ஆண் மயில்கள் அப்படியே மெல்ல அசைந்து அசைந்து வந்து மணற்பரப்பிலே ஆடுகின்றன. அருகில் உள்ள மலர்ச் செடிகளிலே வண்டுகள் முரல்கின்றன. அந்த ஒலி யாழோசை போல இருக்க, மயில்கள் நடனமாதரைப்போல ஆடுகின்றன.

வயல்கள் நிரம்பிய மருத நிலத்தில் கரும்பை வெட்டும் ஒசையும் நெல்லை அரியும் ஒசையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/80&oldid=1232503" இலிருந்து மீள்விக்கப்பட்டது