பக்கம்:கரிகால் வளவன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81


இந்த ஏரிகளுக்கு அப்பால் பலமான கதவுகளையுடைய மதில் ஓங்கி நிற்கிறது. அந்தக் கதவுகளில் சோழ அரசனுடைய புலிச்சின்னத்தைப் பொறித்திருக்கிறார்கள்.

நகரத்துக்குள்ளே புகுந்தால் முதலிலே கண்ணில் படுவது அன்னதானம் செய்யும் அறச்சாலை. அங்கே சோற்றை வடித்த கஞ்சி ஆற்றைப்போல ஓடுகிறது. அந்தக் கஞ்சியைக் குடிக்க வரும் காளை மாடுகள் தம்முள்ளே சண்டை போடுகின்றன. அதனால் கஞ்சி பாயும் இடம் சேறாகிவிடுகிறது. பிறகு அங்கே வண்டிகள் செல்வதனால் சேறு காய்ந்து புழுதி பறக்கிறது. அருகில் உள்ள மாடங்களிலே அந்தப் புழுதி படிகிறது.

இந்த அறச்சாலைக்கு அருகே பசு மாடுகளையும் எருதுகளையும் பாதுகாக்கும் சாலைகள் இருக்கின்றன. அவற்றினுள்ளே கேணிகள் உள்ளன. அப்பால் தவம் செய்பவர்களின் மடங்களும் முனிவர்கள் வேள்வி செய்யும் சாலைகளும் காளி கோயிலும் உள்ள இளமரச் சோலைகளைக் காணலாம்.

கடற்கரைப் பக்கத்தில் பரதவர் மக்கள் தமக்கு விருப்பமான ஊனைத் தின்றுவிட்டு அடப்பம்பூவைத் தலையிலே செருகிக்கொண்டு ஆட்டை முட்டவிட்டு விளையாடுகிறார்கள். காடை கவுதாரிகளைச் சண்டையிடச் செய்து பார்க்கிறார்கள். ஒருவரோடு ஒருவர் மற்போரும் வாட்போரும் செய்து விளையாட்டு அயர்கிறார்கள்.

பரதவர் தெருவில் உறைக்கிணறுகள் இருக்கின்றன. பன்றிகளையும் கோழிகளையும் அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/87&oldid=1232510" இலிருந்து மீள்விக்கப்பட்டது