பக்கம்:கரிகால் வளவன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

செய்ததையும் உருத்திரங் கண்ணனார் அழகாகப் பாடினார்.

பாட்டை நிறைவேற்றிய புலவர் கரிகாலனிடம் சென்றார். பல புலவர் கூடிய அவையில் அதனைப் படித்து அரங்கேற்றினார். சோழ நாட்டு வளத்தைக் கேட்டு மகிழ்ந்தார் பலர். பட்டினத்தின் சிறப்பைக் கேட்டுக் கேட்டு, ‘நன்று, நன்று’ என்று கூறிப் பாராட்டினர் பலர். காவிரிப்பூம்பட்டினத்தின் அமைப்பைச் சித்திரிக்கும் பகுதிகளைப் புலவர்கள் யாவரும் கேட்டுக் கேட்டு இன்பக் கடலில் மூழ்கினர். அப்பால் கரிகாலனுடைய வீரப் புகழை விரிக்கும் பகுதியைக் கேட்டு வியந்தார்கள். அரங்கேற்றம் நிறைவேறியது.

புலவருக்குத் தூசும் துகிலும் மணியாரமும் அளித்தான் கரிகாலன். அவற்றோடு பதினாறு லட்சம் பொன்னைப் பரிசாக அளித்தான். “பாட்டுக்கு ஏற்ற பரிசு” என்று யாவரும் பாராட்டினார்கள்.

“பட்டினத்தின் புகழை இவ்வளவு சிறப்பாகப் பாடினவர் யாரும் இல்லை; அப்படிப் பாடிய புலவருக்கு இவ்வளவு மிகுதியாகப் பரிசளித்த மன்னனும் யாரும் இல்லை.”

“உருத்திரங் கண்ணனார் வாக்கிலே பொன் கொழிக்கும் காவிரியைக் கண்டோம்; பொன் விளைக்கும் நிலத்தைக் கண்டோம்: பொன் வளரும் பட்டினத்தைப் பார்த்தோம். இத்தனையையும் பாடிய புலவரிடம் பொன் கொழிக்க வேண்டாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/92&oldid=1232513" இலிருந்து மீள்விக்கப்பட்டது