பக்கம்:கரிகால் வளவன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

கண்டு பேசும் பேறும் அவனுக்குக் கிடைத்தது. அவனுடைய எழில், வளவனுடைய மகளின் உள்ளத்தை வவ்வியது. அப்படியே அவனும் அவளைக் கண்டு காமுற்றான். இருவர் உள்ளமும் ஒன்று பட்டன.

இந்தச் செய்தியைக் கரிகால் வளவன் அறிந்தான். தாமே காமுற்று மணம் செய்து கொள்ளும் காதல் மணத்தைத் தமிழ் நூல்கள் மிகச் சிறப்பாகப் பாராட்டுகின்றன. ஆதலால் தன் மகளுடைய காதல் வளர இடம் கொடுத்தான் வளவன். பின்பு அவ்விருவருக்கும் மிகச் சிறப்பாகத் திருமணம் நிகழ்ந்தது.

திருமணம் நிகழ்ந்தது முதல் ஆட்டனத்தி சோழ நாட்டிலே தங்கியிருந்தான். தன் அரும்பெறற் காதலியாகிய ஆதிமந்தியுடன் பல இடங்களுக்குச் சென்று வந்தான். சோலைகளுக்குச் சென்று தண்ணந் தென்றல் வீச, மலர் மணம் எங்கும் பரவ, வண்டு பாட, குயில் இசையியம்ப, மயில் ஆட, அங்கே தங்கி இன்புற்றான். ஆற்றிலும் குளத்திலும் நீராடி இன்புற்றான்.

காவிரியாற்றைப் பார்த்துப் பூரித்துப் போனான் ஆதிமந்தியின் காதலன். வேலி ஆயிரம் கலம் விளையும்படி ஆக்கும் அந்த ஆற்று வளத்தால் தமிழ் நாட்டில் சோழ மண்டலத்துக்குத் தனி வளம் அமைந்திருப்பதை எண்ணி எண்ணி வியந்தான். அவன் தன் ஊரில் இருந்தபோது அடிக்கடி கடலில் நீராடுவான். கடலில் குதித்தும் மூழ்கியும் அலையில் மிதந்தும். நீந்தியும் விளையாடுவதில் அவனுக்கு விருப்பம் அதிகம். காவிரி நீரிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/95&oldid=1205269" இலிருந்து மீள்விக்கப்பட்டது