பக்கம்:கரிகால் வளவன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

ஒரு நாள் கரிகாலனோடு அவர்கள் புறப்பட்டார்கள். அதிகப் பரிவாரங்களோடு புறப்பட்டால் காவிரியின் அழகை அமைதியாகக் காண முடியாது என்று எண்ணிச் சில ஏவலாளர்களை மாத்திரம் அழைத்துக்கொண்டு சென்றார்கள். காவிரிப்பூம் பட்டினத்துக்குச் சிறிது மேற்கே உள்ள கழார் என்ற இடத்துக்குப் போனார்கள்.

அங்கே இடம் வசதியாக இருந்தமையால் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். புது வெள்ளம் பரந்து ஓடும் காவிரியின் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு ஆட்டனத்தி கூத்தாடினான். “உன்னுடைய மேனியிலே அழகு வெள்ளம் பொங்குவது போலப் பொன்னி நதி வெள்ளப் பொலிவுடன் பூரித்து ஓடுகிறது” என்று ஆதிமந்தியிடம் சொன்னான்.

வெள்ளத்தைக் காணக் காண அதில் இறங்கி ஆடவேண்டும் என்ற ஆசை அவனிடம் உண்டாகிப் பெருகியது. ஆற்றில் குதித்தான். தன் மனம் போனபடியெல்லாம் துளைந்து விளையாடலானான்.

“இது கடலன்று. நீரின் ஓட்டம் வேகமாக இருக்கிறது. நெடுந்தூரம் போகாமல் கரைக்கு அருகிலே நீந்தி விளையாடுங்கள்” என்று ஆதிமந்தி சொன்னாள்.

“ஆழமும் கரையும் காணாத கடலிலே விளையாடினவனுக்கு இந்தக் காவிரி எம்மாத்திரம்?” என்றான் அவன்.

“கடல் வேறு, காவிரி வேறு. கடலில் ஓட்டம் இல்லை. இங்கே ஆளை இழுத்துப் புரட்டும் ஓட்டம் இருக்கிறதே!” என்று அவள் எச்சரித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/97&oldid=1232516" இலிருந்து மீள்விக்கப்பட்டது