பக்கம்:கரிகால் வளவன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

“நீ பெண்பால்; ஆதலால் அஞ்சுகிறாய். உன் அச்சத்துக்குக் காரணமே இல்லை” என்று சொல்லி அவன் நீந்தத் தலைப்பட்டான்.

நீந்த நீந்த அவன் ஆவல் பெருகியதே ஒழிய அடங்கவில்லை. கரையினின்றும் நெடுந்தூரம் நீந்திச் சென்று மீண்டும் வந்து கரையேறினான். இவ்வாறு துணிவோடு அவன் காவிரியினிடையே நீந்துகையில் நீரோட்டம் வேகமாக உள்ள இடத்தில் அவன் அகப்பட்டான். அந்த இடத்தில் நிலை கொள்ளாத ஆழம் இருந்தது. அங்கே அவன் சென்றவுடன் அவன் கைகள் ஓய்ந்தன. தடுமாறினான்.

கரையில் இருந்த ஆதிமந்தி அவன் தடுமாறியதைக் கண்டாள். “ஐயோ! ஐயோ!” என்று கதறினாள். கூடாரத்துக்குள் இருந்த கரிகாலன் வெளியிலே வந்து பார்த்தான். ஏவலாளர்களும் வந்தார்கள். “அதோ பாருங்கள். அவர் ஆற்றோடு போகிறாரே!” என்று கதறினாள் ஆதிமந்தி. ஆட்டன் அத்தி ஆற்றின் நீரோட்டத்திலே சிக்கிப் போய்க் கொண்டிருந்தான். அவன் கைகள் வலிமையை இழந்தன. கரிகாலன் ஏவலர்களை ஏவினான். மன்னன் ஏவுவதற்கு முன்பே சிலர் ஆற்றில் குதித்து அரசிளங் குமரனை மீட்க முயன்றார்கள். அவர்களால் அவனைப் பிடிக்க முடியவில்லை. ஆதிமந்தி, “ஐயோ! ஐயோ!” என்று கதறிக் கொண்டு காவிரிக் கரையின் வழியே ஓடினாள். நீரின் வேகம் மிகுதியாக இருந்தது. ஆட்டனத்தியின் உருவம் சிறிது தூரம் வரையில் தெரிந்தது. அதைப் பார்த்துக்கொணடே அவள் ஓடினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/98&oldid=1232517" இலிருந்து மீள்விக்கப்பட்டது