பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.2 கரிப்பு மணிகள்

விற்பனைச் சங்கம் நல்லபடியாகச் செயல்பட, அடுத்த ஆண்டுக்குள் பாலம் வந்து விடவேண்டும் எம்பெருமானே!” என்று நினைத்து வேண்டிக் கொள்வார்.

பையன் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். எல்லா நம்பிக்கைகளுமே நிறைவேறும் என்ற தைரியம் ஆட்டம் கண்டுவிட்டாற் போலிருக்கிறது. ஆனால், மனிதன் நம்பிக்கை இழக்கக் கூடாது.

இப்போது நீராடிக் கும்பிட்டுத் திருநீற்றுப் பிரசாதம் வாங்கிக் கொண்டு அருணாசலம் திரும்புகிறார். பசி எரிச்சல் கிளர்ந்து வருகிறது. வீட்டில் அவள் ஒரு வேலை ஒழுங்காகச் செய்வதில்லை. வாயைத் திறந்தால் குதர்க்கமும் சண்டையும் மிஞ்சுகின்றன. பொன்னாச்சியும் அந்தப் பையனும் சென்ற பின்னர் இங்கே இன்னமும் தரித்திரம்தான் கூடியிருக்கின்றன. இரண்டு பேர் குறைந்ததால் வளமை மிஞ்சிவிடவில்லை. துண்டை உடுத்துக் கொண்டு ஈரவேட்டியை விரித்துப் பிடித்தவராய் அவர் அளத்துக்கு நடக்கிறார். வானம் பளிச் சென்று நீலமாக இல்லை. ஆடி அமாவாசைக்குச் சிறிது மூட்டம் போட்டாற்போல் தானிருக்கும்.

பாத்தியில் மேல் தண்ணி திறந்துவிட வேண்டுமென்ற நினைப்புடன் அவர் ஒடைக்காலில் இறங்கிக் கடந்து மேலேறு கிறார். வெள்ளைத் துணிகளைக் காயப் போட்டாற்போன்று அவரது அளம்தான் முழுதுமாக உப்பளமாக இருக்கிறது. வரப்பிலேறிப் பாத்திகளைப் பார்த்துக் கொண்டு வருபவர் ஒரு பாத்தியில் வந்ததும் திகைக்கிறார். உப்பு குருணைச் சோறாகப் பூக்கவில்லை. பருமனாக இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கோடைக்கால மழை மணிகள் போல் இறங்கி இருக்கின்றன. இவ்வாறு உப்புப் பூத்தால் மழை வருவதற்குக் கட்டியம்’ என்பார்கள். மழை ஆடியிலேயே விழுந்துவிடுமோ? மழை மணி கண்டால் உப்பு விலை ஏறும், ஆனால் மழை பிறந்து விட்டால் உப்புக் காலம் போய். விடுமே?