பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

வது சொல்லி வைக்க வேண்டுமே என்பதற்காக “அப்போலோ' பதின்மூன்றைக் கிளப்புகிறோம்.

‘பாருங்கள் ஒப்பிலாமணி! அப்போலோ பதின்மூன்றிலே பிராணவாயு டேங்கு வெடித்துங் கூட, விண்வெளி வீரர்கள் மூவரும் திறமையுடன் விண்ணிலே பறந்து மண்ணிலே வந்து சேர்ந்து விட்டார்களே? இது மிகவும் வியப்பாயில்லையா? இதைப் பற்றிய விவரம் இன்றைய செய்தித்தாளில் விரிவாகப் போடப்பட்டுள்ளது. இந்தக் காலத்து விஞ்ஞானத்தின் பெருமையை என்னவென்று பாராட்டுவது'-என்று நாம் சொல்கிறோம். இதைக் கேட்டதும், ஒப்பிலா மணி ‘குதி-குதி’ என்று குதிக்கிறார். இந்தக் காலத்துவிஞ்ஞான அருஞ்செயல்கள் அந்தக் காலத்திலேயே நடந்திருப்பதாக மீசையை முறுக்குகிறார். இதோ, அவர் பேசத் தொடங்கி விட்டார்.

“என்ன சார் இது! இந்தக் காலத்திலே தானா விண்ணிலே பறக்கிறார்கள்? அந்தக் காலத்திலேயே ஆகாயத்திலேபறக்கவில்லையா என்ன! இராமாயணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இராவணன் விமானத்தின் மூலம் விண்ணிலே சஞ்சரிக்க வில்லையா? அனுமார் விமானம் இல்லாமலேயே வானத்தில் தாவு-தாவு’ என்று தாவவில்லையா? சீவக சிந்தாமணியை எடுத்துக் கொள்வோம். மன்னன் சச்சந்தன் தன் மனைவியை மயில் பொறியில் வைத்து விண் வழியாகப் பறக்கச் செய்து வேற்றிடம் போகச் செய்ய வில்லையா? அப்போலோ சந்திர மண்டலத்திற்குத்தான் போகிறது. அதிலும் அப்போலோ பதின்மூன்று போக முடியாமல் திரும்பி வந்துவிட்டது. ஆனால், கணவனை இழந்த கண்ணகி விமானத்தில் ஏறி மோட்ச லோகத்தையே அடைந்து விடவில்லையா? ஏன், பெரிய புராணத்தையே எடுத்துக் கொள்வேமே! சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளையானையின் மேலும் சேரமான் பெரு-