பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

'மேல் நாடு என்பது மேற்கில் உள்ள நாடு என்ற பொருளில் அல்லவா வழங்கப்படுகிறது? நீங்கள் நினைக்கிறது போல அல்ல இலக்கியசாமி அது!

'எந்தப் பொருளிலாயினும் சரியே. மேல் நாடு என்று வெள்ளையன் நாட்டைக்குறிப்பிடுவதை நான் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது: நம் நாட்டில் பலருக்கு நாட்டுப் பற்றே கிடையாது. அயலான் நாட்டையே புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். நமக்குத் தெரியாதது வெள்ளையனுக்குத் தெரிந்து விட்டதா என்ன! அவன் இன்றைக்குத் தெரிந்து கொண்டதை நாம் அந்தக் காலத்திலேயே தெரிந்து கொண்டோமே! அவன் இன்றைக்குக் கண்டுபிடித்ததை நாம் அந்தக் காலத்திலேயே கண்டு பிடித்து விட்டோமே! உதாரணமாகப் பாருங்கள்! அவர்கள் துப்பாக்கி கண்டுபிடித்தது கொஞ்ச காலத்திற்கு முன்புதான். நம் நாட்டிலோ துப்பாக்கி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது. ஒரு திருக்குறளில் துப்பாக்கி சொல்லப்பட்டிருக்கிறது. குறளைச் சொல்லுகிறேன் கேளுங்கள் :

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை" (12)

இந்தக் குறளில் துப்பாக்கி சொல்லப்பட்டிருக்கிறது, பாருங்கள்! மேலும் சிலர், இந்தக் காலத்தில் தான் 'காப்பி' கண்டு பிடிக்கப்பட்டதாகச் சொல்கின்றனர். அந்தக் காலத்திலேயே காப்பி இருந்தது - அந்தக் காலத்திலேயே நம் நாட்டார் காப்பியை ஆற்றிச் சாப்பிட்டார்கள் - என்பனவற்றையெல்லாம் இவர்கள் அறியார்கள் போலும்! தொன்மைக் காலத்திலேயே காப்பி இருந்தது என்பதைத் தொல்காப்பியர் என்னும் பெயர் அறிவிக்கவில்லையா? அந்தக் காலத்திலேயே காப்பியை ஆற்றிச்சாப்பிட்டனர்