பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

நினைவுக்குக் கொண்டு வந்து, அவற்றை அடிப்படை அனுபவ மூலதனமாகக் கொண்டு வைத்துக் கொண்டு, அவற்றால் கிடைக்கும் படிப்பினைகட்கு ஏற்ப, எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிட்டு ஆக்கச் செயல்கள் புரிந்து நல்வாழ்க்கை நடத்துவதே வரலாறு படிப்பதின் நோக்க மல்லவா? எனவே, எந்தத் துறையில் நாம் பழம் பெருமை பேசுவதாயினும் அதற்கு ஓர் அளவு இருக்கவேண்டும். அவ்வாறு பேசுவதும், எதிர்கால வாழ்க்கைக்குப் பயனளிக் கத்தக்க படிப்பினையை உணர்த்துவதாக இருக்கவேண்டும். சுருங்கச் சொல்லின், பழம் பெருமை பேசுவது, உணவுக்கு உப்பு அமைவது போல் உரையாடலில் அளவாக இருக்கவேண்டும். அதோடு, ஆக்கத்திற்கு அடிகோலுவதாகவும் அமையவேண்டும்.

குறிப்பு:- இந்தக் கட்டுரை நகைச் சுவைப் பகுதியாதலின், உரையாடும் பேச்சு நடையில் எழுதப்பட்டுள்ளது.

தமிழ்ச் சங்கப் பகுதி

12. நெடுந் தொகை -
தொகுப்புக் கலை

திரட்டூக்கம் :

உதிரிகளைத் திரட்டித் தொகுத்து வைக்கும் திரட்டூக்கம் (Acquisition) குழவி முதல் கிழவி கிழவன் வரையிலான மக்களின் இயல்பூக்கங்களுள் (Instincts) ஒன்றாகும். உலக மயக்கத்திற்கு உட்பட்டு வேண்டாத பொருள்கள் பலவற்றை விரும்பி மிகுதியாகத் தொகுத்து வைப்பதனினும், சிறந்த செய்யுள்களைத் தொகுத்து வைப்பது