பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

வெளியீடு) என்னும் தொகை நூலும், ஆங்கிலத்தில் பதினாறாம் நூற்றாண்டில் 'டாட்டல்' (Tottle) என்பவரால் 'Book of Songs And Sonnets' or' Tottle's Miscellany' என்னும் தொகை நூலும் முதல் முதலாகத் தொகுத்து உருவாக்கப்பட்டன.

தமிழ்த் தொகையின் தொன்மை:

தமிழில் தொகை நூல்களைக் குறிக்க மாலை, கோவை முதலியனவாக ஏறக்குறைய இருபது பெயர்கள் உள்ளன. தமிழில், இற்றைக்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகட்கு, முன் தலைச் சங்க காலத்தில் பரிபாடல், களரியாவிரை முதலிய தொகை நூல்களும், இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன் இடைச் சங்க காலத்தில் கலி, வெண்டாளி, வியாழமாலை முதலிய தொகை நூல்களும், இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் நெடுந்தொகை, குறுந்தொகை முதலிய தொகை நூல்களும் தொகுத்து உருவாக்கப்பட்டன. சங்ககாலத்திற்குப் பின் எண்ணற்றவை தோன்றியுள்ளன.

எட்டுத்தொகை :

இப்பொழுது முழுதும் கிடைத்திருக்கும் தமிழ்த் தொகை நூல்களுள் மிகவும் பழமையானவை 'எட்டுத் தொகை' எனப்படும் கடைச் சங்க நூல்கள் எட்டுமாகும். இவற்றை,

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்தபதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறம்என்று,
இத்திறத்த எட்டுத் தொகை"

என்னும் பழம் பாடலால் அறியலாம். எட்டு நூல்களும் இந்தப் பாடலில் வரிசைப் படுத்தப்பட்டுள்ள முறை சரியன்று, இதற்கு முன்பே இறையனார் அகப்பொருள்