பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

அளிக்கப்பட்டுள்ளன. இரட்டைப்படை எண்களுள் இரண்டு, எட்டு என்னும் இருவகை எண் கொண்ட பாடல்கள் குறிஞ்சிக்கும், நான்கு முல்லைக்கும், ஆறு மருதத்திற்கும் பத்து நெய்தலுக்குமாகப் பங்கிடப்பட்டுள்ளன. அஃதாவது, ஒவ்வொரு பத்துப்பாடல்களிலும் பாலைக்கு ஐந்தும் குறிஞ்சிக்கு இரண்டும் முல்லை, மருதம், நெய்தல் ஆகிய வற்றிற்கு ஒவ்வொன்றும் இருக்கும். எனவே, நானுாறு பாடல்களிலும், பாலைக்கு இருநூறும், குறிஞ்சிக்கு எண்பதும், மற்ற வற்றிற்கு நாற்பது வீதமும் இருக்கும். இந்த எண் தொகுப்பு முறை மிகவும் வேலைப்பாடு கொண்ட ஒரு வகைக் கலைச் செயலாகும்.

இரு பெருந் திணைகள்:

நெடுந்தொகையில் பாலைத்திணைப் பாடல்கள் மிகுதியாய்த் தொகுக்கப்பட்டிருப்பது பற்றி ஒருசிறிது ஆராய வேண்டும். ஐந்திணைகளைக் குறிஞ்சி, பாலை என்னும் இருபெருந் திணைக்குள் அடக்கிவிடலாம். மருதத்தைச் குறிஞ்சியிலும், முல்லை நெய்தல் இரண்டையும் பாலையிலும் அடக்கலாம். குறிஞ்சி என்பது புணர்தல்; மருதம் என்பது ஊடுதல்; ஊடுதலின் முடிவு கூடுதல். குறிஞ்சியிலும் மருதத்திலும் தலைவன்-தலைவியர் இணைந்தேயிருப்பர்’ எனவே, ஊடுதலாகிய மருதத்தைக் கூடுதலாகிய குறிஞ்சியில் அடக்கலாம். அடுத்து,-பாலை என்பது பிரிதல்; முல்லை, பிரிந்து ஆற்றியிருத்தல்; நெய்தல், பிரிந்தபோது ஆற்றாது இரங்குதல். இம்மூன்றும் பிரிவு தொடர்பானவை யாதலின், முல்லையையும் நெய்தலையும் பிரிதலாகிய பாலையுள் அடக்கலாம். ஆகவே, ஐந்திணைகள், குறிஞ்சி, பாலை என்னும் இரண்டனுள் அடங்கும். "இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்” என்னும் தொல்காப்பிய (செய்யுளியல்-208) நூற்பா இதனைக் குறிப்பாய் உணர்த்துகிறது.