பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

பெரும்பான்மைக் கட்சி:

இனிக்குறிஞ்சியும் பாலையும் பற்றி ஆய்வோம்: குறிஞ்சி புணர்தல்; பாலை பிரிதல். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்மாறானவை. குறிஞ்சி என்னும் கட்சித் தலைவனுக்கு மருதத்தான் ஒருவன் மட்டுமே வாக்கு (VOTE) அளித்துள்ளான். பாலை என்னும் கட்சித் தலைவனுக்கோ முல்லையான், நெய்தலான் ஆகிய இருவரின் வாக்குகள் கிடைத்துள்ளன. குறிஞ்சியினும் பாலையே பெரிய கட்சி. இந்த அடிப்படையில் நோக்கின், நெடுந்தொகையிலுள்ள நானூறு வாக்குகளுள் (பாடல்களுள்) குறிஞ்சிக் கட்சிக்கு (குறிஞ்சி 80+மருதம் 40=120) நூற்றிருபது வாக்குகளும், பாலைக்கட்சிக்கு (பாலை 200+ முல்லை 40+ நெய்தல் 40=280) இருநூற்றெண்பது வாக்குகளும் கிடைத்துள்ளமை புலனாகும். பாலை, மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்ட பெரும் பான்மை (Majority) வாக்குகள் பெற்று மிகப் பெரிய கட்சியாக நெடுந் தொகையில் ஆட்சி செலுத்துகிறது.

பாலை பெற்றிருக்கும் பெரும் பான்மை, பாலைக்கு உரிய பிரிதலாகிய துன்பச் சுவைப் பாடலையே பெரிதும் மக்கள் விரும்பியுள்ளனர் என்பதை அறிவிக்கிறது.

இன்பியல்-துன்பியல்:

நாடகக் கதையினை இன்பியல் (Comedy), துன்பியல் (Tragedy) என இருவகையாகப் பிரித்துக் கூறுவர். இன்பமாக முடிவது இன்பியல். துன்பமாக முடிவது துன்பியல். குறிஞ்சியை இன்பியல் எனவும் பாலையைத் துன்பியல் எனவும் கூறலாம். இதனை, இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் என்னும் தொல்காப்பிய (செய்யுளியல்-208) நூற்பா குறிப்பாய் உணர்த்துவது போல் இல்லையா?